Wednesday 26 September 2012

பஞ்சதந்திர கதைகள் ------- அடுத்துக் கெடுத்தல்

               அந்த காட்டை ஒட்டியே ஒரு நகரமும் ....நகரத்திற்கும் ...காட்டிற்கும் நடுவில் நிறைய கிராமங்களும் சூழ்ந்திருந்தன. காட்டிற்கும் ...நகரத்திற்கும் ..கிராமங்களே எல்லையாக இருந்தன. நகரத்தை சிங்க அரசன் ஆண்டுக் கொண்டிருந்தது ...காட்டில் வேட்டையாடி..நன்கு...அனுபவித்து...அனுபவங்கள் ஈட்டி...இப்போது அனைத்து காட்டு நடவடிக்கைகளிலிருந்து சற்றே விலகி ஓய்வில் இருந்துக் கொண்டிருந்தது . இருந்தாலும் காட்டு நடவடிக்கைகளையும் ஒரு பார்வையில் வைத்திருக்க ஒரு நரியை நியமித்திருந்தது. நியாயமாக ... இந்த நரியை பற்றி சொல்லும் போது நயவஞ்சக நரி என்கிற பதத்தை சேர்த்திருக்க வேண்டும்...ஆனால் பாருங்கள்...இந்த பஞ்சதந்திர கதைகளில் ( அப்பாடா ..தலைப்பு கிடைச்சிருச்சு !) ...எங்கே ஒரு நல்லெண்ணம் கொண்ட நரி வந்திருக்கிறது ?..ஆகவே புத்திசாலியான பின்நவீனத்துவ வாசிப்பாளர்களால் நாம் அந்த பதத்தை சேர்க்க தேவையில்லை ! So , அந்த வெறும் நரி இந்த கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இல்லாத ...அட்டூழியங்களை செய்யத் தொடங்கியது என்று சொல்லவும் வேண்டுமோ..? பி.ந.வா. புரிந்து கொள்வார்கள் ! இது போன்ற ஒரு காலக் கட்டத்தில் ... காட்டில் ஒரு புலி வாழ்ந்து கொண்டிருந்தது ....இவர் தான் நம் ஹீரோ...இல்லை...இல்லை...ஜீரோ...( இது நரி பார்வையில்)...இந்த புலியானது...தான் உண்டு ....தன் வேட்டை உண்டு என்று 'பொழப்பை' பார்த்துக் கொண்டிருந்தது ! தொழில் வேட்டை என்றிருந்தாலும் ...காட்டின் நெறிமுறைப்படி தான் அங்கு வேட்டை நடக்கும்.! தாங்க முடியாத பசியில் தான் அங்கு  இன்னொரு உயிரை எடுக்க அனுமதி உண்டு ! நாட்டை விட காட்டில் சட்ட திட்டங்கள் மிக கடுமையான முறையில் கடைபிடிக்கப்படும் ! நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது நாட்டில் சட்டங்கள் கடுமையாக கடைபிடிப்பது போலவும் ....கிராமங்களில் தான் கட்டுப்பாடுகள் அதிகம் என்பது போல ஒரு மாயை .... ஆனால் இவை இரண்டும் உன்னதமான முறையில் உள்ள இடம் காடு மட்டுமே ! அதனால் தான் .. இந்த வயதிலும் ...சிங்கத்தினால் ..நகரத்தில் சிறப்பான ஆட்சி செய்ய முடிகிறது.! காட்டில் அது பெற்றிருந்த அனுபவங்களே காரணம்...! இந்த கதை பல நூற்றாண்டுக்கு முந்தையது என்பதால் ...அப்போதெல்லாம் காடு அழிப்பு சமாச்சாரங்கள் தொடங்கவில்லை...இருப்பினும் எதிர்காலங்களில் இவை ஏற்படும் என உணர்ந்த சிங்கம் ....இப்போதே காட்டை பேணி காக்க முடிவு செய்து தான் ... 'நன்றாக காட்டு விஷயங்களை பயிற்றுவித்ததாக' நம்பப்படும் நரியிடம் ஒப்படைத்தது ! ( இங்கு ஒரு சந்தேகம் வரலாம்...நரியால் எப்படி சிங்கத்தை ஏமாற்ற முடியும் என்று...சிங்கம் - காட்டிலிருந்து வந்து ஆட்சி செய்யும் நகரவாசி !...நரி - நகரத்திலிருந்து காட்டிற்கு வந்து ஆட்சி செய்யும் நகரவாசி ! ) மேற்கண்ட வேறுபட்ட அனுபவத்தால் மிக எளிதாக சிங்க ராஜாவை தன் சொற்படி நடத்தி வந்தது..! 

நரி காட்டின் விஷயங்களில் தலையிடுவதற்கு முன் சில விஷயங்களை அதற்கேற்றார் போல் சரி செய்ய எண்ணியது : அவைகளில் தலையாயனது 
- காட்டில் இப்போது பலத்துடன் வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜீரோ புலியை ஒழித்துக் கட்டுவது....தானுண்டு தன் வேலையுண்டு என்று புலி இருக்கிறது ..என்றாலும் தன்னை விட வலிமையுடன் உள்ள இந்த புலியால் என்றுமே ஆபத்து தான் என்ற எண்ணம் !  இத்தனைக்கும் அந்த புலிக்கும் ..நரிக்கும் பல வருட பழக்கம் வேறு...( பழக்கம் என்று தான் சொல்ல வேண்டும்...நட்பு என்று சம்பிரதாயாமாக சொன்னாலும் பின்னாடி வருவதை நினைத்துப் பார்ப்பதால் 'பழக்கம்' என்பதே உசிதம்...தூத்தேறி.!) பல வருடங்களாக சிங்க ராஜாவின் காட்டு விஜயங்களின் போது ..அவர் கூடவே இந்த நரியும் வந்து விடும்...அப்பொழுது தான் இந்த பழக்கம் ...அது சமயத்தில் புலி செய்யும் பணிகளை கண்டு நரிக்கு உள்ளூர பொறாமை தீ கொழுந்து விட்டு எரியும்..! " சில நாட்கள் இருக்கும் போதே இந்த அளவுக்கு சிங்க ராசாவின் மனம் கவர்கிறான்...ஏதேது ..இந்த புலியை இப்படியே விட்டால் ...நமக்கு 'சோலி' முடிந்து விடும் ... இந்த ராசாவையும் நம்ப முடியாது !", என முடிவெடுத்து ...புலியை வகையாக ஒரு விசயத்தில் சிக்க வைத்து விட்டது !

சிங்க ராஜா கடுங்கோபம் கொண்டது போல் ஆகி " இனி இந்த காட்டில் உனக்கு இடம் இல்லை" என்று கர்ஜித்து ...நாடு...ஸாரி...காடு கடத்தியது !  புலியும்.....( ஹெலோ..ஹலோ ..இருங்க...என்ன பிரச்சனை ?..சிக்க வைத்தது எப்படி ?..போன்ற கேள்விகளுக்கான பதில்  " இது பஞ்ச தந்திர கதை...இதில் உள்ள நீதியை தான் தெரிந்துக் கொள்ளணும் ! " என்று பின்நவீனத்துவ வாதிகளுக்கும் .;.."அந்த சம்பவத்தை மட்டும் தனிப் பதிவாக போடப்படும் !" , என்று முன்நவீ....வேண்டாம்..மற்றவர்களுக்கும் சொல்லப்படுகிறது ! இது தான் இது காறும் உள்ள நீதி !) 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

காடு கடத்தப்பட்டதாக நினைக்கப்பட்ட புலி...தனக்கென ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு 'பொழப்பை ' பார்க்கத் தொடங்கியது .... இந்த புதிய வாழ்க்கையில் புலிக்கு ஒரு யோசனை ஏற்ப்பட்டது..." இவ்வளவு நாளாகத்தான் மாமிசப் பட்சினியாக  இருந்து விட்டோம்...இனிமேலாவது ...நாம் சைவப் பட்சினியாக மாறிவிடுவோம் ", என்று முடிவெடுத்தது ! அதற்க்குக் காரணம் ....சிங்கராஜாவின் ஆணையின்படி தான் தேர்ந்தெடுத்த காட்டின் எல்லையோர கிராம சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம்! ஏனெனில் அந்த இடத்தில்...மான் , முயல் போன்ற உயிரினங்கள் கிடையாது...வீட்டு  விலங்குகளான...ஆடு..மாடு...நாய்..போன்ற விலங்குகளையும் ...தர்மப்படி வேட்டையாடக் கூடாது...! அணில் போன்ற சிறு பிராணிகளோ  ..இதன் அகோரப் பசிக்கு ஈடாகாது...கிட்டத்தட்ட ..புலியை உயிர் வாழ திராணி இல்லாமல் போகச் செய்ய நரி போட்ட திட்டம் என புலிக்கு நன்கு விளங்கியது ! நேரடியாக மரணதண்டனை கொடுக்காமல் ..இப்படி 'சுற்றி வளைத்து' ஆளைக் கொல்லும் ' திட்டங்கள் ..ஆண்டாண்டுக் கால ' நரி வம்ச திட்டம்'.., புலி விஷயத்திலும் அரங்கேறியது ! மேற்கூறிய காரணத்தால் தன் உயிரை காப்பாற்றிக்....கொல்ல ( இங்கு சின்ன 'ல்' ..வருவது ...சரியானதொரு காரணத்திற்க்காக ...வாடிக்கையாளர்கள் டென்ஷன் ஆக வேண்டாம்)  தான் புலி சைவ பட்சினியாக முடிவெடுத்து .... பின் புற்களை எடுக்க ஆரம்பித்தது ! ஆம் புலி புற்களை தின்ன ஆரம்பித்து விட்டது...உயிர் வாழ..! ( இதை எனக்கு புலி சொல்லும் போது அதற்க்கும் ...இப்போது எழுதும் போது எனக்கும் ...கண்ணீர் வருகிறது .. கலிகாலம் !) 

காலங்கள் சென்றன...புலி இந்நேரம் ஒழிந்திருக்கும் என்று எண்ணி...இருந்தாலும் ஒரு சம்சயத்துடன் ஒரு ஒற்றனை அனுப்பி 'புலி இருப்பை ' பார்த்து வரச் சொன்னது நரி ! அந்த 'ஒற்ற' அணிலும் பார்த்து விட்டு ..புலி ஜெகஜோதியாக புற்கள் தின்று... வலம் வருவதை .. நரி காதில் போட்டு  விட்டது ! அவ்வளவு தான் நரி .., ஆடிப் போய் ..."ஒழிவான் எனப் பார்த்தால் ..வேறொரு வாழ்க்கை கைகொள்கிறானே" ,என கறுவிக் கொண்டு...ஒரே குத்தில் இரண்டு மழலை பெற எண்ணியது ! சிங்கராஜாவிடம் ஒரு வரையாடு வளர்ந்து வந்தது ....( நன்றாக கவனிக்கவும்...கருப்பு ஆடு அல்ல..அல்ல.....பின்னால்...அல்லது பின்னாளில் யாரேனும் வருந்தினால் FB பொறுப்பாகாது) . அதை செல்லமாக சிங்க ராஜா வைத்திருந்ததால் ..வழக்கம் போல நரி கண்ணில் உறுத்தி...அதையும் காவுக் கொடுத்து ...புலியையும் மாட்டி மரணதண்டனை கொடுக்க முடிவெடுத்தது ! நைச்சியமாக பேசி வரையாட்டை புலியிடம் அனுப்பியது ! மாமிசமே தன்னை தேடி வந்ததும் ...புலியின் மனம் ஒரு நொடி தடுமாறியது...பின் நிதானித்து ..நரி தந்திரம் புரிந்து...வரையாடாக பார்க்க துவங்கியது ! இனி அவைகளின்  உரையாடலை கவனிப்போம் !

" ம்ஹே..மே..!....ம்ஹே..மே..! இங்கே என்ன செய்கிறாய் ! "

"கிர்..கிர்...! இது புல் வெளி என்னும் பொது வெளி !"

ம்ஹே..மே..! ம்ஹே..மே..! இருந்தாலும் இதுவும் எங்கள் இடம்...எங்கள் புற்கள்.. தின்னாதே !"

"கிர்...கிர்...! என் வாழ்வாதாரத்துக்கு இங்கு வசிக்கிறேன்...  புற்களை உணவாக்கிக் கொள்கிறேன்  ...உங்களிடமிருந்து விலகியே !"

"ம்ஹே..மே..! ம்ஹே..மே..!...அதெல்லாம் கிடையாது ...நீ இங்கு வசிக்கவும் கூடாது...புற்களையும் தின்னக் கூடாது ! "

புலிக்கு லேசாக கோபம் ஏற்ப்பட்டது..."சிங்கராஜாவின் செல்லத்திற்குரியது என பார்த்தால் இப்படி முட்டாள்த்தனமாக ...(நரி) சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல்......இல்லை ஆட்டுப்பிள்ளை போல  .....கத்திக் கொண்டிருக்கிறதே ....உணர்வுகள் புரியாமல்...! நான் புலி எனக் கூடவா மனதில் உரைக்கவில்லை..முட்டாள் ஆடு ! ". என்று நினைத்தபடி...கோபத்தையும் சற்று மென்று ...பொறுமையாக ...பேசியது..!

"ஆடான ..நீ நரிப்பேச்சு கேட்டு வந்துள்ளாய் ....அந்த நரி உன்னை விட எனக்கு ஆண்டாண்டுகால பழக்கம் ...நரி விதைத்த வினைகளுக்கு ..நான் அறுவடை செய்யப் போகிறேன்...நீ இதில் மாட்டிக் கொள்ளாதே...உன் மேல் எனக்கு கோபமில்லை...போய் வேலையை  பார் !"

" முடியாது...நீ என்ன...ஜாதியெல்லாம் பேசுகிறாய்....நரி ஜாதி என்கிறாய்...ஆட்டு ஜாதி என்கிறாய்...ஜாதிவெறி பிடித்தவனே ..போ..!"

"அடக்கடவுளே...நரியை ..நரி என்று தான் நான் கூறினேன்....இதில் ஜாதி எங்கே உள்ளது...இப்படி ஜாதியை இழுக்கவும் நரி சொன்னதோ .."!

ஆடு  அயர்ந்து போனது..."எதை பேசினாலும் ..நரி சொல்லிக் கொடுத்ததை கண்டுபிடித்து விடுகிறானே...இவனைப் பார்க்க பயமாய் இருந்தாலும் ...நம்மை எதிர்க்காததால் ..கொஞ்சம் தைரியமாக உள்ளது ...விடக் கூடாது !"...என்றெண்ணியபடி ...

"முடியாது...முடியாது...போ..போ...", என்று வேகமாக தலையாட்டியபடி கத்தியது ! வேகமாக அது தலையசைத்ததன் விளைவாக...சிங்க ராஜா உருவம் பொறித்த ஆரம் ..அது கழுத்தில் வேகமாக ஆடியதை ..புலி கவனித்தது ...சட்டென்று சிங்க ராஜாவின் ஞாபகம் வந்தது..."இந்த ஆட்டுக்கு ..நம் உணர்வுகள் புரியாததில் ஆச்சரியமில்லை ... ஆனால் நம்மைப் போல காட்டில் வாழ்ந்த ராஜாவுக்கு புரியுமே ..", என்று யோசிக்கும் போதே அதற்கு ஒரு விஷயம் சட்டென்று புலப்பட்டது ! " சிங்கராஜாவுக்கு தெரியாதது எதுவுமில்லை....எனக்கு  இப்படி நெருக்கடி கொடுப்பது கூட ...ஒரு வித பயிற்சியோ..பாடமோ...எதிர்கால ......!" இந்த எண்ணம் ஏற்பட்டதும் புலி மகிழ்ச்சியுடன் ஒரு உத்வேகம் கொண்டது....மனதில் புதிய...புத்த..சிந்தனையுடன் ..ஆட்டை நெருங்கி வாஞ்சையுடன் அதன் முதுகில் தன் முன்னங்கால்களில் ஒன்றை வைத்து " நண்பா...சிங்க ராஜாவின் அன்பிற்குரியவன் நீ...அவர் ஒருவரின் ஆதரவே உனக்கு உச்சமான விஷயம்...எனக்கு எதிரி நரி மட்டும்  தான் ...நீங்களெல்லோரும் என் நண்பர்களே ...இந்த நாட்டாமை நரி பேச்சு கேட்டு ஏன் உன்னை பாதித்துக் கொள்கிறாய் "  என்று சொல்லியது ! ஆனால் ஆடோ...பதிலேதும் கூறாமல் ...தன் உடம்பை வேதனையுடன் நெளித்துக் கொண்டே ...மெதுவாக ...கீழாக படுத்து...பின் தவழ்ந்து...தள்ளாடியபடி ..ஓட முடியாமல் ஓடியது ! புலிக்கு ஆச்சரியம்..".இவ்வளவு சொல்லி கேட்காமல் ...இப்போது முதுகில் கை வைத்து சொன்ன பிறகு ...புரிந்து கொண்டதே .." என்று ! ஆனால் உண்மை என்னவென்றால்...இந்த புலிக்கு புல்லை..தின்று தின்று ..தன் இருப்பு ..நிஜம் மறந்து ..வலு மறந்து ..தன் காலை வைத்தவுடன்...ஆட்டிற்கு மூச்சு கூட விட முடியாமல்...பாரத்தால் அழுந்தப்பட்டு ...."ஏதேது இவன் நட்போடு கூடிய அணைப்பையே  தாங்கிக் கொள்ள முடியவில்லையே...கோபம் வந்தால்..என்னவாகுமோ " என்றவாறு உணர்ந்து தான் ...விலகி ...பிடரி கால் பட ..ஓட நினைத்தது ! இது தெரியாத அந்த புலி வழக்கம் போல...அருகிலிருந்த பசும்புதரில்..நன்கு சதைப்பற்றுடன் கூடிய புல் தண்டுகளை கடித்து...அதில் வரும் துவர்ப்பான ரஸத்தை ரத்தமென உறிஞ்சத் தொடங்கியது.... அந்த உயர்தர சைவ இலக்கியப்புலி !