Saturday 24 November 2012

கலைப்பு கலை


அயர்லாந்தில் வசித்த நமது இந்திய பெண் டாக்டர் சவிதா அவர்கள் தான் சுமந்திருந்த கருவின் பிரச்சனையால் அதை அங்குள்ள மருத்துவமனையில் கலைக்க வேண்டிய போது , அங்குள்ள மருத்துவர்கள் அந்நாட்டு சட்டத்திட்டத்தின்படி நிர்தாட்சண்யமாக மறுத்து சவிதாவின் மரணத்திற்கு காரணமாகி விட்டதாக சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கிறது ! கருவை கலைக்கக் கூடாது என்று ...உயிரைக் கொடுத்து சட்டத்தை காப்பாற்றி இருக்கிறார்கள் ! என்னே தேச பக்தி !  இந்த காலத்திலும் .... இப்படியெல்லாம்....பத்தாம்பசலித்தனம் ! ஆனால் , இந்த விஷயத்தில்  நம் தேசம் மிக அற்புதமான சேவை அளி(ழி)த்துக் கொண்டிருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ! இது போன்ற சேவைகளை செய்யும் ஒரு பின்நவீனத்துவ பெண் மருத்துவர் ஒருவரை நான் அறிவேன் ....  

சில வருடங்களுக்கு முன்பு எனது தோழி ஒருவரை காதலியாக்கும் பொருட்டு ஒரு கடிதம் எழுத விரும்பினேன்....பிரச்சனை என்னன்னா ஏற்கனவே அவருக்கு பலர் கொடுத்து விட்டிருந்தனர் , ஆகவே தனிச்சிறப்புடன் விளங்க .... தொன்று தொட்டு பயன்படும் டெக்னிக்கான ரத்தத்தில் எழுத முடிவு செய்தேன் ! வீட்டில் ரத்த பொரியல் செய்ய அப்பா ஆட்டு ரத்தம் வாங்கி வரும் போது அதை வைத்து ...என்று யோசித்து பின்னர் அதை தவிர்த்து, உண்மையாக இருக்க வேண்டும் என எண்ணினேன் .அந்த சமயத்தில் புண்ணோ ... காயமோ வேறு இல்லா ததால் , நான் கண்டிப்பாக புதிய ஏற்பாடுகளும் ...காயங்களும் தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி ஒரு பிரபல மருத்துவமனை அருகே ஒரு மெடிக்கல் ஷாப்பில் எனது நண்பனொருவன் வேலை செய்துக் கொண்டிருந்தான் ... அவனை அணுகி ரத்தப் பரிசோதனைக்கு செய்வது போல் , நரம்பில் ஊசி சொருகி தேவையான ரத்தத்தை எடுத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றேன்...அவனும் அக மகிழ்ந்து வேலையை உடனே ஆரம்பித்து விட்டான் ! இந்த ஊசி விஷயம் மிக கவனமாக கையாளப்  பட வேண்டிய விஷயம்... விஷமெல்லாம் தேவையில்லை....வெறும் ஊசியை ....மருந்து இருப்பது போல் குத்தி விட்டாலே போதும்...உள்ளே சன்ன மாக சென்ற காற்றே ...உலை வைத்து விடும் ! ஆனால் நண்பனோ மெடிக்கல் ஷாப்பில் மருந்து எடுத்துக் கொடுக்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்துக் கொண்டிருப்பவன் ...ஒரு ஆர்வத்தில் அவன்  ஒத்துக் கொண்டாலும்...பாதி ரத்தம் எடுக்கும் போது ... air lock ஆகி ...air bubbles சோடு உள்ளே அனுப்பப் பார்த்து ...நான் பதறி .. ஒரு வழியாக நானே ..எடுத்து விட்டேன் ஊசியை.. . தேவையான ரத்தத்துடன் தான் ! ஒரு முழு வெள்ளை தாளில் எழுதும் படலம் ....குச்சி , பேனா போன்றவற்றில் .. உடனடியாக உறைந்து விடுவதால் ....விரலால் தொட்டு எழுத ஆரம்பித்தேன். I LOVE YOU ....  S ...! My true Luv ....இன்ன பிற...Bla ...Bla ! ரத்தம் கொஞ்சம் நிறையவே எடுத்து விட்டதால் .... இன்னும் மீதம் இருந்ததை கொட்ட விரும்பாமல்...இன்னொரு தாளிலும் imposition போல் அவள் பெயரை எழுதி .... தீர்த்தேன் ! எல்லாவற்றையும் மொத்தமாக பார்த்தால் ... மிக கொடுமையாக இருந்தது...ரத்தம் என்றொரு விஷயத்தால் ...கொஞ்சம் மரியாதை இருக்கும் என்று நம்பினேன் . இதை இப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போக முடியாது என்பதால் ...நன்கு காயும் வரை அங்கேயே இருக்க ஆரம்பித்தேன்,நண்பனும், "இதுக்கு ட்ரீட் வேணும் மாப்பிள்ளை  .... பிரியாணி ..! " என்று பணம் வாங்கிக் கொண்டு .... 'லஞ்ச் பிரேக்' போர்டு மாட்டி விட்டு சென்று விட்டான் . நானும் பொழுது போக்க என்று எதிரில் உள்ள மருத்துவமனையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் ! அந்த தனியார் மருத்துவமனை நம் தேசத்தின் மக்கள் தொகை குறைப்பு பணியை செவ்வனே செய்து வரும் ஒரு மனை , ஒரு பெண் மருத்துவரால் நிர்வகிக்கப்படுவது ! மிக ..மிக சிக்கலான 'கேஸுகள் ' கூட இங்கு தான் வரும்.... அந்த வகையில் அந்த மருத்துவர் "ஆயிரம் சிசு நீக்கிய அபூர்வ சிந்தாமணி " என்கிற பட்டத்திற்கூரியவர் !
இந்த கலை ப்பு பணிக்கு ...ஆண் சிசு..பெண் சிசு  என்ற பேதமில்லை ... கலைப்பே பிரதானம் .!  அவர் தொழிலில் எவ்வளவு 'சிரத்தை' எடுத்துக் கொ(ல்)ள்பவர் என்றால்.... ஒரு முறை சிசு நன்கு வளர்ந்து ....அதை நீக்கினால் மிகுந்த பாதிப்பு என்றும் ,  எங்கும் செய்ய முடியாது எனவும்  அனுப்பி விட்ட கேஸ் ஒன்றை ... மிக அனாயாசமாக கையில் உறை  அணிந்து ..உள்ளே விட்டு ....பிடித்து இழுத்து ....வராமல் போகவே....வெண்டைக்காயை செடியிலிருந்து  முறுக்கி பறிப்பது போல் ....கை..கால்களை...ஒவ்வொன்றாக பிய்த்து எடுத்து...கடைசியில் பிண்டம் மட்டும் வந்து ...தலை மட்டும் தங்கி...பின் அதனையும் ...ஏனைய உருப்படிகளோடு நெம்பி எடுத்து தன் சேவையை இனிதே நிறைவேற்றிய மகராசி  ! இவ்வளவு கஷ்டத்திலும் அந்த பெண் கதறி ....அழுது...வலிக்கிறது ...வேண்டாம் என்று அழும் போதும்....."இன்னும் நல்லா காலை விரிடீ ....அப்ப விரிக்கும் போது மட்டும் சுகமாயிருந்துச்சோ " , என்றெல்லாம் பாசத்தோடு பேசுபவர் அந்த மருத்துவ சிகாமணி ! ஆனாலும் இவர் எவ்வளவோ திட்டினாலும் ...பொறுத்துக் கொண்டு .... வேலையை முடித்துக் கொண்டு தான் ... வருபவர்களும் செல்வார்கள் ! ஏனெனில் வருபவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள்...பின்னே இருக்காதா...கணவர் வெளிநாடு சென்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இருக்கும் போதோ ....அல்லது இன்னும் திருமணம் ஆகாமல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதோ ....எப்படி குழந்தை இருக்க முடியும்....? அது நம் கலாச்சாரத்திற்கு இழுக்கல்லவோ...? அவ்வகையில் அந்த டாக்டர் நம் கலாசல் ...சாரி... கலாச்சார காவலராகவே எனக்கு தோன்றுவார் !  என் ரத்தக் கடித படலம் அன்றும் ஒரு 'கலைப்பு படலம் ' அரங்கேறிக் கொண்டிருந்தது ! யாருக்கும் தெரியாமல்....யாருக்கும் தெரியாமல் என்று ஊருக்கே தெரியும்படி சில அரை வேக்காடுகள் நடந்துக் கொள்வார்கள் ! அந்த விஷயத்தில்...நான் பார்த்த வரையில் , திருமணமானவர்கள் வயதுக்கேற்றவாறு சற்று maturityயுடன் நடந்துக் கொள்வார்கள் ! பெரும்பாலும் தனியாகவோ ..அல்லது கூட ஒரே ஒரு நபராக...ஆண் அல்லது பெண் மட்டும் வருவார்கள். சர்ரென்று ஒரு ஆட்டோவோ ...காரோ வந்து இறக்கி விட்டு சென்று விடும் ....பின் வேலை முடிந்ததும்.....வாகனம் சரியான நேரத்தில் வந்து அழைத்து செல்லும் ! வந்ததும் தெரியாது...போனதும் தெரியாது..!
ஆனால் 'கல்லூரி கலைப்பு'  இருக்கிறதே.... ஒரு குறும்படமே எடுக்கலாம் .... இந்த நிகழ்வை மட்டுமே ! அதே போல் ஒரு ஆட்டோவோ ..காரோ வந்து நிற்கும் .... ஆனால் கூடவே ...குறைந்தது இரண்டு பைக்குகளில் 3 பேர் வீதமாக பைலட் வீரர்கள் போல் வேகமாக வந்து நின்று...பின் உள்ளே யார் செல்வது என்று தயங்கி ...ஓரமாக ...வந்த வேகத்துக்கு சம்பந்தமில்லாமல் நிற்பார்கள் ! பின் சிற்சில விவாதத்திற்குப் பின்...ஒரு சித்தப்பு மட்டும் ..சம்பந்தப்பட்ட நாயகருடன் உள்ளே செல்லும் ! நான் பார்த்த அன்று ... பெண் ஏற்கனவே உள்ளே சென்று விட்டார் ....நட்பு குழாம் மட்டும் வெளியே ...வழக்கம் போல் நின்றுக் கொண்டிருந்தது ! காதலுக்கு உதவுவது போல் ...கலைப்புக்கும் உதவும் நல்ல நண்பர்கள் ! இந்த மாதிரி சமயங்களில் யார் சம்பந்தப்பட்ட பிரகஸ்பதி என்று ..மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்...மிகுந்த சோகத்துடன்...கண்களில் சற்று குழப்பத்துடன்...மிக பரிதாபமாய் ...அவ்வப்போது நண்பர்கள் வந்து..டாக்டர் பீஸ் , மருந்து - மாத்திரை , நர்சுக்கு டீ , சாப்பாடு போன்ற இன்னபிற விஷயங்களுக்கு வந்து நிற்கும் போதெல்லாம்...எதுவும் பேசாமல்...எங்கோ பார்த்தபடி மேல் பாக்கெட்...உள்  பாக்கெட் .., டிக்கெட் பாக்கெட் ...ஆகியவற்றிலிருந்து பணத்தை மௌன குருவாக கொடுத்துக் கொண்டிருப்பவர் ... சில சமயங்களில்...மோதிரம்...செயின் ! வேகமாக ... விருட்டென்று நுழைந்த பெண்கள் எல்லாம்....சொல்லி வைத்தது போல் ...திரும்பும் போது ...கரும்புச்சக்கையாய் வெளி வருவார்கள் ! வெளி வந்ததும்...மிகுந்த ஆயாச ...பாசத்துடன் ...பிரகஸ்பதியை தேடும்...அவரோ...மனசாட்சி குத்த...நெருங்கவே பயந்து...தயங்கி...தழைந்து ...நின்று பார்த்து கொண்டிருப்பார் நண்பர்களுடன் ! திடீரென்று நர்ஸ் வந்து க்ளைமாக்சை முடித்து வைப்பார்கள்..."யோவ்...என்ன வேடிக்கை பார்த்துகிட்டு நிக்கிறே...பார்த்து புடிச்சு... கைத்தாங்கலா ..பத்திரமா...இட்டுகினு போ...திரும்ப..ஏதும் பண்ணிடாத...உடம்பு தாங்காது..!", என்று அன்போடு கட்டளை இட்டதும் தான் ..நம்ம நாயகர் ,ஆதரவுடன் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார் .... ஊருக்கோ அல்லது ஹாஸ்டலுக்கோ...பைலட் வீரர்களுடன் ! இப்படி இவர்கள் போகும் போது ...ஒரு சோக வயலின் இசை ...BGM ஆக எனக்குக் கேட்டது...கூடவே ஒரு கேள்வியும் ! " எத்தனை பேர் ...இது போன்ற சம்பவத்துக்குப் பின் திருமணம் செய்துக் கொள்கிறார்கள் ... அவர்களுக்குள் ! 
    பல நாட்களாக இந்த மருத்துவ மனை விஷயங்களை நான் அறிந்து...அவ்வபோது பார்த்திருந்தாலும் ....அன்று ...முழுமையான ஒரு சம்பவத்தை அருகிலிருந்து பார்த்தது மனதை சற்று பாதித்தது....ஒரு வேளை அன்று காதல் கடிதம் எழுதிய நெகிழ்ச்சியான மன நிலையாகவும் இருக்கலாம்...!  

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது...ஆண் பெண் உறவு ..ஏன் இப்படி சிக்கலான உறவாக உள்ளது..?  நம்ம சாரு அடிக்கடி புலம்பும் செக்ஸ் வறட்சியோ ..? தேச வளர்ச்சிக்கு ஒரு புரட்சி தேவை போல் .... இதற்கும் ஒரு செக்ஸ் புரட்சி தேவையோ..? புரட்சியால் ..வறட்சி நீங்க....செக்ஸ் புரட்சிக்கு ...நீரூற்றி வேர் விட வேண்டுமா  ?

தாளில் ரத்தம் நன்கு காய்ந்து...கரித்துண்டில் எழுதியது போல் இருந்தது .... நாற்றம் வேறு ..தாங்க முடியவில்லை ! அளவோடு இருந்திருக்க வேண்டும்.!
இதெல்லாம் தேவையா...இப்படி எல்லாம் செய்து ஒரு உறவை உருவாக்க வேண்டுமா...என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து ..நண்பன் வந்ததும் வீட்டிற்கு கிளம்பினேன் !

பின் ஒரு நாள் ...perfume அடித்து அதை ஒரு greeting card ல் வைத்துக் கொடுத்து விட்டேன் ! 

Friday 5 October 2012

நண்பேன்டா..!


ஒரு 'பழ' நண்பன் எங்களுக்கு இருக்கிறான்  ....கோபால்.....சரக்கே தொட மாட்டான்...ஆனா அதை தாண்டி ...குறையே வைக்காம சைடு டிஷ்ஷை காலி பண்ணிடுவான் ! அவன் பண்ற அநியாயத்துக்கு ..பேசாம அவன் சரக்கே அடிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைப்போம் ! ஆனால் பாருங்க ... எல்லா சரக்கு வட்டத்திலும் இப்படி ஒரு தவிர்க்க முடியாத நண்பன் இருந்து விடுவான். இதில் ஒரே ஒரு நற்பயன் இருக்கிறது...பில்லை சரி பார்த்தல் , உடமைகளை பாதுகாப்பாக எடுத்து வைத்தல் போன்ற சிறப்பு சேவைகளை இவர் நன்றாக பார்த்துக் கொள்வார் (தண்ணி அடிக்காததால் ) என்றதொரு ஆஸ்தான  நம்பிக்கை ! ஆனால் நடப்பதென்னவோ ....இவர்கள் கவனம் முழுதும் ...நொறுக்குகள் மற்றும் உணவுப் பொருட்களை கபளீகரம் செய்வதிலேயே போய் விடும் ...அப்புறம் எங்கிட்டு ..பார்த்துக்கிறது.? இதில் தலையாய கடமையான வீட்டில் கொண்டு போய் விடுதல் ... அல்லது படுக்கையில் கொண்டு விடுதல் போன்ற சேவைகளுக்கு இவர்கள் பணி இன்றியமையாத ஒன்று ! இதில் நம்ம கோபால் சிறந்து விளங்கியதால் ( வேறு வழியின்றி) ...இவன் அனைத்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களிலும் அழைக்கப்படுவான் ! இதற்க்கு தன்னை தகுதிப்படுத்தி  கொள்ளவே அவன் ... 4  வீலர் லைசென்ஸ் முதற்கொண்டு எடுத்து விட்டான் (அவனிடம் கார் கிடையாது ) என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ! ஒரு முறை எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ...'புல் பூஸ்டில்' எங்களால் 'பப்பரப்பா '....என்று அழைக்கப்படும் நண்பன் ஒருவன்...காரை ஓட்டிச் சென்று ...காவலரிடம் மாட்டி கொண்டு..பெருத்த கப்பம் கட்டினான் ! அதிலிருந்து சபையில் ...'சரக்கடிக்கா தோழன்' கோபாலே போக்குவரத்தை பார்த்துக் கொள்ள முடிவானது ! அந்த உரிமையில் அவன் ப(உ)ண்ணும்   அனைத்தையும் ...நாங்கள் ஜீரணித்துக் கொள்வோம்!
முதல் ரவுண்டு ஆரம்பிக்கும் போது எல்லாம் நன்றாகவே ஆரம்பிக்கும்...நாங்களும் எச்சரிக்கையா.." நண்பா...எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம் ...ஆனா பொறுமையா சாப்பிடுவோம் ...உனக்கு எது வேணும்னாலும் நீ ஆர்டர் பண்ணிக்க " என்று சொல்வதெற்கெல்லாம் மண்டைய ஆட்டி விட்டு ...வழக்கம் போல அட்டகாசத்தை ஆரம்பித்து விடுவான் ! டிஷ்கள் வந்ததும் அவன் விரல்கள் நர்த்தனம் ஆட ஆரம்பித்து விடும்....சட்..சட்டென்று...சினிமாவில் காட்டுவது போல் தட்டில் குறைய ஆரம்பிக்கும் ....முதல் ரவுண்டை முடித்து விட்டு பார்த்தால் ..தட்டில் பேருக்கு கொஞ்சம் துணுக்குகளும் ...சில எலும்பு துண்டுகளும் மட்டும் இருக்கும் ! இவ்வளவையும் செய்து விட்டு ..தனக்கும் ..இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ..ஒரு முகத்தை வச்சுக்கிட்டு உட்காந்திருப்பான் பாருங்க ....காண கண் கோடி வேண்டும்..! சரி அடுத்த ரவுண்டில் கவனமா இருக்கணும்னு .."மச்சி இது முழுசா உனக்கு மட்டும் தான் ... இது நாங்க சாப்பிடறதுக்கு ", என்று நண்பர்கள் நாகரீகமாக கோடிக்காட்டி விட்டு இரண்டு முழு தந்தூரி கோழி சொல்வார்கள்..! ஒன்றை முழுதாக நண்பனுக்கு அர்ப்பணித்து விட்டு ...இன்னொன்றை மற்றவர்கள்...தனியாக ...பாதுகாப்பான எல்லையில் வைத்து விட்டு ...தீர்த்தவாரி ஆரம்பிப்பார்கள். தந்தூரி ..ஏனைய டிஷ்ஷை விட கொஞ்சம் பொறுமையாகவே சாப்பிட முடியும் என்பதால் இந்த ஏற்பாடு !  நினைத்தது போலவே ..அது சற்று மெதுவாகவே காலியாக ஆரம்பிக்கும்...ஆனால் எல்லாம் சிறிது நேரம் தான் ..பின் வழக்கமாக வேகம் ஆரம்பித்து விடும். 
இந்த இடத்தில கூட இவ்ளோ டென்ஷனா என்று நான் காந்தியீய வழிப்படி கொண்டக் கடலை சுண்டல்,வெஜ் .சாலட் ,கடலை மற்றும் பருப்பு வகைகளோடு போதும் என்று....சிற்றின்பத்தில் இருந்து விடுவேன். ஏனெனில் , எங்கள் வீட்டில் சாம்பார் வைப்பது தான் அதிசயம்...தினந்தோறும் அசைவ உணவுத் திருவிழா தான் ..அதனால் நான் இந்த ஆட்டத்தில் ஒதுங்கி விடுவேன்.போட்டியே கோவாலுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் தான்! அதிலும் அந்த பப்பரப்பா நண்பனுக்கும் ...இவனுக்கும் நடக்கும் உணவுப்போர் இருக்கிறதே...சொல்லி மாளாது ! பப்பரப்பா நண்பன் உயர்தர சைவ ஆச்சார குடும்பத்தை சேர்ந்தவன்...இது மாதிரி வெளியில் வந்தால் தான் அவனுக்கு வாய்ப்பே ! அதனால் ..நிதானமாக ..ரசித்து...ருசித்து ..சாப்பிட விரும்புவான் , ஆனால் அவனுக்கு சரியான 'கவுண்ட்டர்' கொடுப்பான் கோபால்! அதுவும் 'பேபி சிக்கன் ரோஸ்ட்' என்றால் அத களம் தான்...! உயிருடனேயே ..ஒரு கிலோவிற்கும் குறைவாக இருக்கும் இளங் கோழியை ..உரித்தால்  ..முக்கால் கிலோவிற்கும் குறைவாகவே இருக்கும் ... அதை கொஞ்சமாக வேக வைத்து ...பின் சிறிது மசாலா கலந்து அப்படியே பொறித்து விடுவார்கள். எண்ணெயை எல்லாம் சுத்தமாக வடிக்கட்டி விட்டு ...பொர பொரவென்று ...பகோடா போல இருக்கும் ... ஒன்று கூட மிஞ்சாது...எலும்பைக்கூட ..காராசேவை போல மென்று தின்று விடலாம் .. அவ்வளவு சுவை ! பொறுமையாக ரசித்து சாப்பிட முடியாத கடுப்பில் பப்பரப்பா நண்பன் " டேய் கோழிக்கு பொறந்தவனே....கோழியவே கல்யாணம் பண்ணிக்கடா ... இப்படி காலி பன்றியடா..!" , என்றெல்லாம் ...நக்கலாகவும் ...கோபமாகவும் திட்டினாலும் ...நம்ம ஆளு கண்டுக்காம வேலையப் பார்ப்பான்! எனக்கே சில சமயம் சந்தேகம் வரும் ...எப்படி எவ்வளவு சாப்பிட்டாலும் ...திரும்ப..திரும்ப...இவனுக்கு உள்ளே இறங்கிகிட்டே இருக்கு..?...உள்ளே ஏதாவது கிரைண்டர் போல அரைக்குமோ என்று ! சாப்பாடு சாப்பிட்டால் கூட     ' தொட்டுக்க ' என்கிற concept இவனிடம் செல்லுபடியாகாது....சைடு டிஷ் தான் மெயின் டிஷ்ஷே !. சோறு தான் தொட்டுக்க..! யாராவது கடிச்சி வச்சி இருந்தாக் கூட கவலைப்பட மாட்டான்..."நமக்குள்ள என்னடா..".  எல்லோரும் அலெர்ட் ஆகி ..அவனுக்கு வாய்ப்பே கொடுக்காத போது...திடீரென்று ஒரு அதிரடி விஷயம் சொல்வான்..! " ..... அவள நம்ம கார்த்தி ...மேட்டர முடிச்சிட்டாண்டா..." , ".... அவரப் பார்த்து...டியுஷன் சேர்ந்தா...செமெஸ்டர கிளியர் பண்ணி விட்டுட்ராராம் !" , இது போன்ற அதிரடி விஷயங்களை..... பிரம்மாஸ்திரங்களை ஏவுவான்...நண்பர்களும் வாய் பிளந்து கேட்கும் சமயத்தில் ..இங்க மேட்டரை முடித்து விடுவான் ! 

இவனை வஞ்சம் தீர்க்க ...இவனது திருமணத்தின் போது ... நண்பர்கள் கூடி ஒரு வேலை செய்தார்கள் ! பொதுவாக எங்கள் நெருங்கிய வட்டார நண்பர்களுக்கு ... திருமணம் முடிந்து ..முதலிரவுக்கு முன்னால் வழியனுப்பும் படலத்தின் போது ..ஏதேனும் ...பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம் ...Perfumes , Imported  condoms , long lasting  sprays என்று கொடுத்து கலாய்ப்போம். இவனுக்கு 'பேபி சிக்கனை' அழகாக 'கிப்ட் பேக்' செய்து ...ரூம் வாசலில் நுழையும் போது கொடுத்து விட்டு வந்தோம் ! ஒரு தமாஷுக்காக இதை செய்தாலும் ."..நண்பன் ...என்ன நினைப்பானோ...அவன் மனைவி இதைப் பார்த்து கிண்டல் செய்து ...எங்கள் மேல்   கோபப்படப் போகிறானோ ", என்றெல்லாம் யோசித்துக் கொண்டே ...மறுநாள் அனைவரும் பார்க்க சென்றோம். "மச்சான் ..இந்த வாரம் முழுக்க நலுங்கு ....விரதம் ..கல்யாணம்னு... வெறும் வடை ,பாயசமா  சாப்பிட்டு நாக்கே செத்துப் போயிருந்தது...நேத்து நம்ம அயிட்டத்தை சாப்பிட்டு தான் ...சந்தோஷமா வேலையே முடிஞ்சுது .. ரொம்ப தேங்க்ஸ் டா ...!" என்றான். நாங்களும்...பொண்ணுக்கு கொஞ்சமாவது கொடுத்தியா...என்று கேட்க நினைத்து ..கேட்கவில்லை...அவனும் இது வரை சொல்லவில்லை..!

Tuesday 2 October 2012

Gandhi Jayanthi !











காந்திஜியை பற்றி ஆயிரமாயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் .....ஒரே ஒரு விஷயத்திற்காக  நாம்...இல்லை நான் மதிக்கும் விஷயம் , உலக அளவில் நம் இந்தியாவின் குறியீடாக விளங்கும் ஒரு தலைவர் அவர் !. வெளிநாடுகளில் கூட  ருபாய் நோட்டிலும் , தபால் தலையிலும் , சிலைகளாகவும் நிறுவப்பட்டவர் ! இந்தியாவின் icon ஆக அவர் திகழ்வதில் இந்தியனாக எனக்கு உள்ளூர ஓர் மகிழ்ச்சி ..! ஒரு பழைய கட்டுரையில் கூட .... பாகிஸ்தானில் ஒரு இளைஞர் காந்திஜியின் புகைப்படத்தை தன் பணப்பையில் வைத்திருந்ததை அறிந்து ஆச்சரியமடைந்திருக்கிறேன் ! ஏனைய தலைவர்களை காட்டிலும் உலகளவில் ஒரு ஆளுமையுடன் இருந்த இந்திய தலைவராக இவர் கருதப்படுகிறார் ... இன்றும் இதை .... Aung San Suu Kyi மூலம் அறிகிறோம் !
ஆனாலும் இங்குள்ளோரே...நாமே  இவரை மிக கடுமையாக சாடுகிறோம் , அது உலகளவில்  இவருக்கு உள்ள நற்பெயரை ...நமக்கு எதிரான நாடுகளுக்கு நம்மைப் பற்றிய தவறான கருத்துகளை பரப்ப  இடமளித்து விடும் ! இவரை நாம் விமர்சனம் செய்யலாம் ..தவறொன்றுமில்லை ...ஆனால் இவரே தனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக "சத்திய சோதனையில் " கூறியுள்ளார் ..என் வாழ்க்கையே உங்களுக்கு ஒரு செய்தியென்று ! இன்று பெரும்பான்மையோர் காந்திஜிக்கு எதிராக கூறும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ..அவர் ஏற்கனவே அந்த புத்தகத்தில் கூறியிருந்தவை தான் ! அவர் ஒரு பெண் பித்தர்...எப்போதும் பெண்கள் அவர் கூடவே இருப்பார்கள் ..இது போன்று பற்பல..உண்டு . ஒரு விஷயம் சொல்கிறேன்...யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ...' பக்கத்து அறையில் அவரது தந்தை தனது அந்திமக் காலத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது கூட....காந்திஜி தன் மனைவியுடன் உடலுறவு கொண்டதை வெட்கமின்றி ஒப்புக்கொண்டுள்ளார் ...பின்னாளில் அதற்க்கு வருத்தமும் கொண்டார் ' ! தன்னைப் பற்றி இந்த அளவு ஒளிவு மறைவின்றி வாழ்ந்த அந்த மனிதனின் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன் ! இப்படி பட்டவர்த்தனமாக அவர் சொன்னதற்க்கான காரணம், " என்னைப் போல் சராசரி மனிதனாக ... புலன்களின் இச்சையில் திரிந்தாலும்...அவனும் ஒரு நல்ல ஆத்மாவாக மாற முயலலாம் " என்பதற்கான ஒரு காரணியாகவே இருக்கும் என்றே நான் கருதுகிறேன் ! அவரைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்....நீங்கள் அவரை விமர்ச்சிக்கும் முன் அவரை முழுதும் படியுங்கள்...குறைந்தபட்சம் அவரது "சத்திய சோதனை " மிக குறைந்த விலையில் கிடைக்கிறது ....அதையாவது ...படித்து விட்டு விமர்சியுங்கள் ! அவர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் அல்ல ....மனிதராக பிறந்த எல்லோருக்குமே  ஒரு சில குறைகளாவது இருக்கும்....அப்போது தானே அவன் மனிதன் .... குறையே இல்லையென்றால்...அவன் தேவன் ...அல்லது கடவுளாகி விடுவானே ! எனக்கும் காந்திஜியின் ஒரு சில கருத்துகளில் உடன்பாடில்லை தான்...உதாரணத்திற்கு....'தற்காத்துக் கொள்ளக் கூட முயலாமல் அடி வாங்கியே இறந்து போன திருப்பூர் குமரன் .... இவரது உறுதியான மனதை உபயோகித்து இறந்து போனதை விட...இன்னும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு (அது அவரது முதல் போராட்டம் என நினைக்கிறேன்)...இன்னும் உரமேற்றியிருக்கலாம் ...ஏன் இவரே எதிர்காலத்தில் ஒரு தலைவனாக உருவாகியும் இருக்கலாம் ! அது போல 'ஜாலியன் வாலாபாக் படுகொலை'...நூறு பேர்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை குருவி சுடுவது போல் சுட்டுக் கொன்றார்கள்......இங்கு அஹிம்சை என்பது.....????

பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திஜி காரணம் என்பது போல ஒரு தவறான தகவல் இங்கு பேசப்படுகிறது...உண்மையில் பிரிட்டிஷாரின் ராஜதந்திரம் அறிந்து ..காந்திஜி அப்படிப்பட்ட பிரித்தாளும் கொள்கையுடைய சுதந்திரம் நமக்கு தேவையேயில்லை என்று கடுமையாக எதிர்த்தவர் ! ஏனைய நமது தலைவர்கள் மற்றும் ஜின்னா அவர்களின் வற்புறுத்தலின் பேரில் பிறகு 'துண்டாடப்பட்டது'...ஆம்...உயிருடன் இருந்த ஒரு தேசத்தை பிரித்ததை இப்படித்தான் சொல்லவேண்டும் ! ஆனால் பின்னாளில் ஜின்னா அவர்கள் இதற்க்கு மிக வருந்தியதாக கேள்விப்பட்டதுண்டு ! தீர்க்கதரிசனத்துடன்  யோசித்தவர்  காந்திஜி ...
நண்பர்களே ...இவரை நாம் மதிக்கிறமோ ..இல்லையோ...நம் நாட்டின் ஒரு தலைவரை இன்று உலகமெங்கும் போற்றும் அந்த மக்களை மதித்து ....நாமும் வணங்குவோம்..! We may criticize Gandhiji but should not avoid him !
###########################################################################
we may criticize Gandhiji but should not avoid him ....

மேற்கண்ட வரியை டைப்பி கொண்டிருக்கும் போது சட்.... சட்டென்று சாருஜியின் நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டேன்....என்னவோ...என்னவோ... ஒரே...மாதிரி....என்ன இது...என்று யோசித்து ..பின்....

வழக்கம் போல் நண்பனிடம் காட்டி படிக்கச் சொன்னேன்...நண்பனும் பார்த்து விட்டு, " நல்லாருக்கு ...இதுக்கு நீ ட்ரீட் வைக்கணும்...ஆறு மணிக்கு மேல ........ஹோட்டல் பாருல சரக்கு கிடைக்குதாம் ..போலாம் வா...!"

வாழ்க பாரதம் !  

Wednesday 26 September 2012

பஞ்சதந்திர கதைகள் ------- அடுத்துக் கெடுத்தல்

               அந்த காட்டை ஒட்டியே ஒரு நகரமும் ....நகரத்திற்கும் ...காட்டிற்கும் நடுவில் நிறைய கிராமங்களும் சூழ்ந்திருந்தன. காட்டிற்கும் ...நகரத்திற்கும் ..கிராமங்களே எல்லையாக இருந்தன. நகரத்தை சிங்க அரசன் ஆண்டுக் கொண்டிருந்தது ...காட்டில் வேட்டையாடி..நன்கு...அனுபவித்து...அனுபவங்கள் ஈட்டி...இப்போது அனைத்து காட்டு நடவடிக்கைகளிலிருந்து சற்றே விலகி ஓய்வில் இருந்துக் கொண்டிருந்தது . இருந்தாலும் காட்டு நடவடிக்கைகளையும் ஒரு பார்வையில் வைத்திருக்க ஒரு நரியை நியமித்திருந்தது. நியாயமாக ... இந்த நரியை பற்றி சொல்லும் போது நயவஞ்சக நரி என்கிற பதத்தை சேர்த்திருக்க வேண்டும்...ஆனால் பாருங்கள்...இந்த பஞ்சதந்திர கதைகளில் ( அப்பாடா ..தலைப்பு கிடைச்சிருச்சு !) ...எங்கே ஒரு நல்லெண்ணம் கொண்ட நரி வந்திருக்கிறது ?..ஆகவே புத்திசாலியான பின்நவீனத்துவ வாசிப்பாளர்களால் நாம் அந்த பதத்தை சேர்க்க தேவையில்லை ! So , அந்த வெறும் நரி இந்த கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இல்லாத ...அட்டூழியங்களை செய்யத் தொடங்கியது என்று சொல்லவும் வேண்டுமோ..? பி.ந.வா. புரிந்து கொள்வார்கள் ! இது போன்ற ஒரு காலக் கட்டத்தில் ... காட்டில் ஒரு புலி வாழ்ந்து கொண்டிருந்தது ....இவர் தான் நம் ஹீரோ...இல்லை...இல்லை...ஜீரோ...( இது நரி பார்வையில்)...இந்த புலியானது...தான் உண்டு ....தன் வேட்டை உண்டு என்று 'பொழப்பை' பார்த்துக் கொண்டிருந்தது ! தொழில் வேட்டை என்றிருந்தாலும் ...காட்டின் நெறிமுறைப்படி தான் அங்கு வேட்டை நடக்கும்.! தாங்க முடியாத பசியில் தான் அங்கு  இன்னொரு உயிரை எடுக்க அனுமதி உண்டு ! நாட்டை விட காட்டில் சட்ட திட்டங்கள் மிக கடுமையான முறையில் கடைபிடிக்கப்படும் ! நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது நாட்டில் சட்டங்கள் கடுமையாக கடைபிடிப்பது போலவும் ....கிராமங்களில் தான் கட்டுப்பாடுகள் அதிகம் என்பது போல ஒரு மாயை .... ஆனால் இவை இரண்டும் உன்னதமான முறையில் உள்ள இடம் காடு மட்டுமே ! அதனால் தான் .. இந்த வயதிலும் ...சிங்கத்தினால் ..நகரத்தில் சிறப்பான ஆட்சி செய்ய முடிகிறது.! காட்டில் அது பெற்றிருந்த அனுபவங்களே காரணம்...! இந்த கதை பல நூற்றாண்டுக்கு முந்தையது என்பதால் ...அப்போதெல்லாம் காடு அழிப்பு சமாச்சாரங்கள் தொடங்கவில்லை...இருப்பினும் எதிர்காலங்களில் இவை ஏற்படும் என உணர்ந்த சிங்கம் ....இப்போதே காட்டை பேணி காக்க முடிவு செய்து தான் ... 'நன்றாக காட்டு விஷயங்களை பயிற்றுவித்ததாக' நம்பப்படும் நரியிடம் ஒப்படைத்தது ! ( இங்கு ஒரு சந்தேகம் வரலாம்...நரியால் எப்படி சிங்கத்தை ஏமாற்ற முடியும் என்று...சிங்கம் - காட்டிலிருந்து வந்து ஆட்சி செய்யும் நகரவாசி !...நரி - நகரத்திலிருந்து காட்டிற்கு வந்து ஆட்சி செய்யும் நகரவாசி ! ) மேற்கண்ட வேறுபட்ட அனுபவத்தால் மிக எளிதாக சிங்க ராஜாவை தன் சொற்படி நடத்தி வந்தது..! 

நரி காட்டின் விஷயங்களில் தலையிடுவதற்கு முன் சில விஷயங்களை அதற்கேற்றார் போல் சரி செய்ய எண்ணியது : அவைகளில் தலையாயனது 
- காட்டில் இப்போது பலத்துடன் வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜீரோ புலியை ஒழித்துக் கட்டுவது....தானுண்டு தன் வேலையுண்டு என்று புலி இருக்கிறது ..என்றாலும் தன்னை விட வலிமையுடன் உள்ள இந்த புலியால் என்றுமே ஆபத்து தான் என்ற எண்ணம் !  இத்தனைக்கும் அந்த புலிக்கும் ..நரிக்கும் பல வருட பழக்கம் வேறு...( பழக்கம் என்று தான் சொல்ல வேண்டும்...நட்பு என்று சம்பிரதாயாமாக சொன்னாலும் பின்னாடி வருவதை நினைத்துப் பார்ப்பதால் 'பழக்கம்' என்பதே உசிதம்...தூத்தேறி.!) பல வருடங்களாக சிங்க ராஜாவின் காட்டு விஜயங்களின் போது ..அவர் கூடவே இந்த நரியும் வந்து விடும்...அப்பொழுது தான் இந்த பழக்கம் ...அது சமயத்தில் புலி செய்யும் பணிகளை கண்டு நரிக்கு உள்ளூர பொறாமை தீ கொழுந்து விட்டு எரியும்..! " சில நாட்கள் இருக்கும் போதே இந்த அளவுக்கு சிங்க ராசாவின் மனம் கவர்கிறான்...ஏதேது ..இந்த புலியை இப்படியே விட்டால் ...நமக்கு 'சோலி' முடிந்து விடும் ... இந்த ராசாவையும் நம்ப முடியாது !", என முடிவெடுத்து ...புலியை வகையாக ஒரு விசயத்தில் சிக்க வைத்து விட்டது !

சிங்க ராஜா கடுங்கோபம் கொண்டது போல் ஆகி " இனி இந்த காட்டில் உனக்கு இடம் இல்லை" என்று கர்ஜித்து ...நாடு...ஸாரி...காடு கடத்தியது !  புலியும்.....( ஹெலோ..ஹலோ ..இருங்க...என்ன பிரச்சனை ?..சிக்க வைத்தது எப்படி ?..போன்ற கேள்விகளுக்கான பதில்  " இது பஞ்ச தந்திர கதை...இதில் உள்ள நீதியை தான் தெரிந்துக் கொள்ளணும் ! " என்று பின்நவீனத்துவ வாதிகளுக்கும் .;.."அந்த சம்பவத்தை மட்டும் தனிப் பதிவாக போடப்படும் !" , என்று முன்நவீ....வேண்டாம்..மற்றவர்களுக்கும் சொல்லப்படுகிறது ! இது தான் இது காறும் உள்ள நீதி !) 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

காடு கடத்தப்பட்டதாக நினைக்கப்பட்ட புலி...தனக்கென ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு 'பொழப்பை ' பார்க்கத் தொடங்கியது .... இந்த புதிய வாழ்க்கையில் புலிக்கு ஒரு யோசனை ஏற்ப்பட்டது..." இவ்வளவு நாளாகத்தான் மாமிசப் பட்சினியாக  இருந்து விட்டோம்...இனிமேலாவது ...நாம் சைவப் பட்சினியாக மாறிவிடுவோம் ", என்று முடிவெடுத்தது ! அதற்க்குக் காரணம் ....சிங்கராஜாவின் ஆணையின்படி தான் தேர்ந்தெடுத்த காட்டின் எல்லையோர கிராம சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம்! ஏனெனில் அந்த இடத்தில்...மான் , முயல் போன்ற உயிரினங்கள் கிடையாது...வீட்டு  விலங்குகளான...ஆடு..மாடு...நாய்..போன்ற விலங்குகளையும் ...தர்மப்படி வேட்டையாடக் கூடாது...! அணில் போன்ற சிறு பிராணிகளோ  ..இதன் அகோரப் பசிக்கு ஈடாகாது...கிட்டத்தட்ட ..புலியை உயிர் வாழ திராணி இல்லாமல் போகச் செய்ய நரி போட்ட திட்டம் என புலிக்கு நன்கு விளங்கியது ! நேரடியாக மரணதண்டனை கொடுக்காமல் ..இப்படி 'சுற்றி வளைத்து' ஆளைக் கொல்லும் ' திட்டங்கள் ..ஆண்டாண்டுக் கால ' நரி வம்ச திட்டம்'.., புலி விஷயத்திலும் அரங்கேறியது ! மேற்கூறிய காரணத்தால் தன் உயிரை காப்பாற்றிக்....கொல்ல ( இங்கு சின்ன 'ல்' ..வருவது ...சரியானதொரு காரணத்திற்க்காக ...வாடிக்கையாளர்கள் டென்ஷன் ஆக வேண்டாம்)  தான் புலி சைவ பட்சினியாக முடிவெடுத்து .... பின் புற்களை எடுக்க ஆரம்பித்தது ! ஆம் புலி புற்களை தின்ன ஆரம்பித்து விட்டது...உயிர் வாழ..! ( இதை எனக்கு புலி சொல்லும் போது அதற்க்கும் ...இப்போது எழுதும் போது எனக்கும் ...கண்ணீர் வருகிறது .. கலிகாலம் !) 

காலங்கள் சென்றன...புலி இந்நேரம் ஒழிந்திருக்கும் என்று எண்ணி...இருந்தாலும் ஒரு சம்சயத்துடன் ஒரு ஒற்றனை அனுப்பி 'புலி இருப்பை ' பார்த்து வரச் சொன்னது நரி ! அந்த 'ஒற்ற' அணிலும் பார்த்து விட்டு ..புலி ஜெகஜோதியாக புற்கள் தின்று... வலம் வருவதை .. நரி காதில் போட்டு  விட்டது ! அவ்வளவு தான் நரி .., ஆடிப் போய் ..."ஒழிவான் எனப் பார்த்தால் ..வேறொரு வாழ்க்கை கைகொள்கிறானே" ,என கறுவிக் கொண்டு...ஒரே குத்தில் இரண்டு மழலை பெற எண்ணியது ! சிங்கராஜாவிடம் ஒரு வரையாடு வளர்ந்து வந்தது ....( நன்றாக கவனிக்கவும்...கருப்பு ஆடு அல்ல..அல்ல.....பின்னால்...அல்லது பின்னாளில் யாரேனும் வருந்தினால் FB பொறுப்பாகாது) . அதை செல்லமாக சிங்க ராஜா வைத்திருந்ததால் ..வழக்கம் போல நரி கண்ணில் உறுத்தி...அதையும் காவுக் கொடுத்து ...புலியையும் மாட்டி மரணதண்டனை கொடுக்க முடிவெடுத்தது ! நைச்சியமாக பேசி வரையாட்டை புலியிடம் அனுப்பியது ! மாமிசமே தன்னை தேடி வந்ததும் ...புலியின் மனம் ஒரு நொடி தடுமாறியது...பின் நிதானித்து ..நரி தந்திரம் புரிந்து...வரையாடாக பார்க்க துவங்கியது ! இனி அவைகளின்  உரையாடலை கவனிப்போம் !

" ம்ஹே..மே..!....ம்ஹே..மே..! இங்கே என்ன செய்கிறாய் ! "

"கிர்..கிர்...! இது புல் வெளி என்னும் பொது வெளி !"

ம்ஹே..மே..! ம்ஹே..மே..! இருந்தாலும் இதுவும் எங்கள் இடம்...எங்கள் புற்கள்.. தின்னாதே !"

"கிர்...கிர்...! என் வாழ்வாதாரத்துக்கு இங்கு வசிக்கிறேன்...  புற்களை உணவாக்கிக் கொள்கிறேன்  ...உங்களிடமிருந்து விலகியே !"

"ம்ஹே..மே..! ம்ஹே..மே..!...அதெல்லாம் கிடையாது ...நீ இங்கு வசிக்கவும் கூடாது...புற்களையும் தின்னக் கூடாது ! "

புலிக்கு லேசாக கோபம் ஏற்ப்பட்டது..."சிங்கராஜாவின் செல்லத்திற்குரியது என பார்த்தால் இப்படி முட்டாள்த்தனமாக ...(நரி) சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல்......இல்லை ஆட்டுப்பிள்ளை போல  .....கத்திக் கொண்டிருக்கிறதே ....உணர்வுகள் புரியாமல்...! நான் புலி எனக் கூடவா மனதில் உரைக்கவில்லை..முட்டாள் ஆடு ! ". என்று நினைத்தபடி...கோபத்தையும் சற்று மென்று ...பொறுமையாக ...பேசியது..!

"ஆடான ..நீ நரிப்பேச்சு கேட்டு வந்துள்ளாய் ....அந்த நரி உன்னை விட எனக்கு ஆண்டாண்டுகால பழக்கம் ...நரி விதைத்த வினைகளுக்கு ..நான் அறுவடை செய்யப் போகிறேன்...நீ இதில் மாட்டிக் கொள்ளாதே...உன் மேல் எனக்கு கோபமில்லை...போய் வேலையை  பார் !"

" முடியாது...நீ என்ன...ஜாதியெல்லாம் பேசுகிறாய்....நரி ஜாதி என்கிறாய்...ஆட்டு ஜாதி என்கிறாய்...ஜாதிவெறி பிடித்தவனே ..போ..!"

"அடக்கடவுளே...நரியை ..நரி என்று தான் நான் கூறினேன்....இதில் ஜாதி எங்கே உள்ளது...இப்படி ஜாதியை இழுக்கவும் நரி சொன்னதோ .."!

ஆடு  அயர்ந்து போனது..."எதை பேசினாலும் ..நரி சொல்லிக் கொடுத்ததை கண்டுபிடித்து விடுகிறானே...இவனைப் பார்க்க பயமாய் இருந்தாலும் ...நம்மை எதிர்க்காததால் ..கொஞ்சம் தைரியமாக உள்ளது ...விடக் கூடாது !"...என்றெண்ணியபடி ...

"முடியாது...முடியாது...போ..போ...", என்று வேகமாக தலையாட்டியபடி கத்தியது ! வேகமாக அது தலையசைத்ததன் விளைவாக...சிங்க ராஜா உருவம் பொறித்த ஆரம் ..அது கழுத்தில் வேகமாக ஆடியதை ..புலி கவனித்தது ...சட்டென்று சிங்க ராஜாவின் ஞாபகம் வந்தது..."இந்த ஆட்டுக்கு ..நம் உணர்வுகள் புரியாததில் ஆச்சரியமில்லை ... ஆனால் நம்மைப் போல காட்டில் வாழ்ந்த ராஜாவுக்கு புரியுமே ..", என்று யோசிக்கும் போதே அதற்கு ஒரு விஷயம் சட்டென்று புலப்பட்டது ! " சிங்கராஜாவுக்கு தெரியாதது எதுவுமில்லை....எனக்கு  இப்படி நெருக்கடி கொடுப்பது கூட ...ஒரு வித பயிற்சியோ..பாடமோ...எதிர்கால ......!" இந்த எண்ணம் ஏற்பட்டதும் புலி மகிழ்ச்சியுடன் ஒரு உத்வேகம் கொண்டது....மனதில் புதிய...புத்த..சிந்தனையுடன் ..ஆட்டை நெருங்கி வாஞ்சையுடன் அதன் முதுகில் தன் முன்னங்கால்களில் ஒன்றை வைத்து " நண்பா...சிங்க ராஜாவின் அன்பிற்குரியவன் நீ...அவர் ஒருவரின் ஆதரவே உனக்கு உச்சமான விஷயம்...எனக்கு எதிரி நரி மட்டும்  தான் ...நீங்களெல்லோரும் என் நண்பர்களே ...இந்த நாட்டாமை நரி பேச்சு கேட்டு ஏன் உன்னை பாதித்துக் கொள்கிறாய் "  என்று சொல்லியது ! ஆனால் ஆடோ...பதிலேதும் கூறாமல் ...தன் உடம்பை வேதனையுடன் நெளித்துக் கொண்டே ...மெதுவாக ...கீழாக படுத்து...பின் தவழ்ந்து...தள்ளாடியபடி ..ஓட முடியாமல் ஓடியது ! புலிக்கு ஆச்சரியம்..".இவ்வளவு சொல்லி கேட்காமல் ...இப்போது முதுகில் கை வைத்து சொன்ன பிறகு ...புரிந்து கொண்டதே .." என்று ! ஆனால் உண்மை என்னவென்றால்...இந்த புலிக்கு புல்லை..தின்று தின்று ..தன் இருப்பு ..நிஜம் மறந்து ..வலு மறந்து ..தன் காலை வைத்தவுடன்...ஆட்டிற்கு மூச்சு கூட விட முடியாமல்...பாரத்தால் அழுந்தப்பட்டு ...."ஏதேது இவன் நட்போடு கூடிய அணைப்பையே  தாங்கிக் கொள்ள முடியவில்லையே...கோபம் வந்தால்..என்னவாகுமோ " என்றவாறு உணர்ந்து தான் ...விலகி ...பிடரி கால் பட ..ஓட நினைத்தது ! இது தெரியாத அந்த புலி வழக்கம் போல...அருகிலிருந்த பசும்புதரில்..நன்கு சதைப்பற்றுடன் கூடிய புல் தண்டுகளை கடித்து...அதில் வரும் துவர்ப்பான ரஸத்தை ரத்தமென உறிஞ்சத் தொடங்கியது.... அந்த உயர்தர சைவ இலக்கியப்புலி !

Sunday 12 August 2012

இலக்கியம் படித்தவன் தான் இலக்கியம் படைக்க முடியுமா? சுயம்புவாக சுய சிந்தனைகளைக்கொண்டு ஒருவனால் இலக்கியம் படைக்க முடியாதா?


உலகில் இன்று வரை leadership quality என்பது பிறப்பிலேயே உருவாவதா...அல்லது வளர்ப்பு முறையில் உருவாக்கப்படுவதா என்று இன்று வரை விவாதங்கள் முடிவுக்கு வராமல் இருந்துக்  கொண்டு தான் உள்ளது. இதே 'முரண் வாதம்' போல் தான் நமது இப்போதைய இலக்கிய விவாதமும். 'தலைமைப்பண்பு' விவாதம் போலவே ..இலக்கியமும் இயற்கையாகவே படைக்கப்படுகிறதா அல்லது 'இலக்கியமாக' உருவாக்கப்படுகிறதா ? இரண்டுமே நடப்பதாகத் தோன்றுகிறது..!  "சுயம்பும்" உண்டு...இராமலிங்க அடிகளாரை இதற்க்கு உதாரணமாக கூறலாம்..அவர் எந்த ..எந்த ..இலக்கியங்களை refer  செய்தார்...அவர்தம் படைப்பிற்கு..?

அதுபோல் திருவள்ளுவரை எடுத்துக்கொண்டால் .., அவரது திருக்குறள் பற்பல புலவர்களின் நீண்ட கால உழைப்பில் உருவான தொகுப்பாகவும் இருக்கலாம் என ஒரு கருத்து உண்டு . இது தர்க்கவியல் ! ஆனாலும் இலக்கியத்தின் norms & conditions  தெரிந்த திருவள்ளுவர் அரும்பாடுபட்டு சேகரித்து தொகுத்து நமக்கு வழங்கியுள்ளார்!.இது சாதாரண விஷயம் இல்லை ..அவரை great literary administrator  எனக் கொள்ளலாம்!
         
       எப்படி இருந்தாலும் இந்த இருவர் மட்டும் அல்லாமல் .. தொன்றுதொட்டு 'கம்பராமாயணம் முதல் இப்போதைய 'எக்சைல்' வரையிலான படைப்புகள்  
மக்கள் நல்வாழ்விற்கே படைக்கப்பட்டன ! ஒரு படைப்பின் மூலம் ஒரே ஒருவன் பயனடைந்தாலே...அந்த படைப்பு இலக்கியம் தான் !

       மண் பயனுற..மாநிலம் பயனுற..படைக்கும் எதுவுமே இலக்கியம் தான்...!

LOVE


இளமையில் புரியாது ...முதுமையில் முடியாது ..!

சரி...

மத்திமத்தில் ..????

Facebook ....... Like


 Like " என்பது FB பொறுத்தவரை 'ஒரு பெயர் பல் பொருள் ' வார்த்தையாக எடுத்துக் கொள்ளலாம் ! நல்ல செய்தி = பிடிச்சிருக்கு, துக்க செய்தி = வருத்தப்படுகிறேன்,பங்கெடுத்துக்கிறேன், எதிர்ப்பு செய்தி = நானும் எதிர்க்கிறேன் . , இது போல் பற்பல.. .மொத்தத்தில் ..இந்த பதிவிற்கு "உடன்படுகிறேன்" என்று பொருள் கொள்ளலாம் !

இது ..." செத்த செய்திக்கு Like ..ஆ.." போன்ற விமர்சனங்களுக்கான ஒரு நட்பு விளக்கம் .. : )

Saturday 11 August 2012

கூக்குரல்


போடுக விஸ்கி பிராந்தி ரம் 
ஆடுக அதற்க்கு தக. 

பொருள்:
அடிக்கற சரக்குக்கு ஏத்த மாதிரி ஆடனும், 'பட்ட' அடிச்சா குத்து...
ஸ்காட்ச் அடிச்சா டிஸ்கோத்து .

Face Book


ஒரு தலை காதல் மட்டும் அல்ல ... ஒரு தலை நட்பும் தான் !

                  Friend Request அனுப்பினால் ........ subscribe..!

The Curious case of Benjamin Button

சராசரி படங்களாகப் பார்த்து சோர்வடைந்திருந்தால் ... இந்தப் படத்தைப் பார்க்கலாம் .. நம்ப முடியாத கதைக் களன் என்றாலும் (ஒருவன் பிறக்கும் போதே 90 வயதுடன்., பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைந்த கிழவனாகப் பிறந்துப் பின் படிப்படியாக வயதுக் குறைந்துக் கொண்டே வரும் கதை ) ..அருமையான திரைக் கதை மூலம் காட்சிகள் நம்பும்படி நகரும் ...இறுதிக் காட்சி எப்படி இருக்குமோ ..என்று நம்மை யோசிக்க வைக்கும்...ஆனால் மிகச் சரியாக முடித்திருப்பார்கள் ! 3 ஆஸ்கர் (Art , Make - up ,Visual Effect ) பரிசுகளைப் பெற்றது!
இந்த படத்தில் chaos தியரி ..Butterfly effect concept ல் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள் ...its a trend setter .. இந்த தியரியை கருவாக வைத்து crash என்ற அற்புதமான படமும் வந்துள்ளது .,அதைப் பற்றி தனியாக பதிவிக்கலாம்..
இந்தப் படத்தைக் கொஞ்சம் 'உல்டா' பண்ணி ,திரு .அமிதாப்பை வைத்து 'Paa' என்று ஹிந்தியில் வந்தது..இசை..நம்ம இளையராஜா அவர்கள்..!



டாஸ்மாக் அநியாயம்..!



முதலில் ௦.50 பைசா ,1 .௦௦ , 2 .00 ...அப்புறம் திடீர்னு 3 .௦௦ (அப்ப மட்டும் சரியாக சில்லறை கொடுப்பாய்ங்க) ..கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை 5 .௦௦...அப்புறம் அரசாங்கமே ,விலை ஏற்றிய பிறகு ..இப்போது 1௦.௦௦ முதல் 15 .௦௦ ரூபாய் வரை கூடுதலாக 'சரக்குகளுக்கு ' அநியாயமாக வசூலிக்கப் படுகிறது ! தரமும் மோசம்..!போறபோக்குல வீட்டுக்கு வீடு நாமே ஒரு 'உரக்குத்தல் ' (home made liquor ) போட்டுட வேண்டியது தான்.! ரெசிபி ஐ கூடிய சீக்கிரம் பகிர்ந்துக்கிறேன் ..!

சுதேசியாய் மாறுவோம்..!

கல்லூரி காலத்தில்..!


கல்லூரியில் பயின்ற நாட்களில் , கடைசி தேர்வு முடியும் அன்று மிகப் பெரிய கொண்டாட்டமாக எங்களுக்கு இருக்கும்.அன்று இரவு ஹாஸ்டல் , Dayscholar என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் விடுதிக்கு வரவேற்கப்படுவர் ! ஆனால் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒரு சரக்கு எடுத்து வரவேண்டும். ஏழை மாணவர்களாக இருந்தால் ஏதேனும் நொறுக்கல்கள்... சாப்பாட்டுக்கு ஏற்கனவே வார்டன் மூலம் 'சிறப்பு அனுமதி' ( ஜானி வாக்கர் gift ..! ) பெற்று அறைக்கே எடுத்து வந்து விடுவோம்...7 மணியிலிருந்து ஒவ்வொருவராக சேர ஆரம்பிப்போம் ...1 கேஸ் பெட்டி பீர் கொண்டு வரும் 'பந்தா' நண்பர்கள் முதல் 1 /4 சரக்கை 3 பேர் கஷ்டப்பட்டுக் கொண்டு வரும் 'எத்தியோப்பிய' நண்பர்கள் வரை கூடி விடுவர்.. ஆனால் அந்த வேற்றுமையை யாரும் பெரிதுப் படுத்தாமல் மகிழ்ச்சி ஒன்றே குறியாக இருப்போம்... இனிமேல் தான் படமே...!
விடுதியிலையே பெரிதாக இருக்கும் வாளி ஒன்றை எடுத்துக் கொள்வோம் ..பெரும்பாலும் குளியலறையில் இருந்து தான் கிடைக்கும் .. அதன் கூட 4 - 5 mugs . பிறகு ஆளாளுக்கு கொண்டு வந்த சரக்குகள் அனைத்தும் ..ஒவ்வொன்றாக திறந்து அதில் கொட்டப்படும். பீர் , பிராந்தி , விஸ்கி ,ரம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அதில் கொட்டப்படும் ...Gentle ஆக 'தனிமை சுகம்' காண சரக்கை ஒளித்து வைத்து இருக்கும் நண்பனிடமிருந்தும் கதற கதற பிடுங்கி ஊற்றப்படும்..பின் அந்த அற்புதக் 'கலவையை' (wild cocktail ?) mug மூலம்
டீ ஆற்றுவது போல் ஆற்றப்படும் ...அப்பொழுதே அன்றைய கலவையின் மகத்துவம் தெரிந்து விடும்.., நுரை அதிகமாக இருந்தால்..அது கொஞ்சம் 'தமாஷ் ' சரக்கு..(பீர் உபயம் அதிகம்)., ஆனால் நுரை சற்று குறைந்தோ .அல்லது மிகக் குறைந்தோ இருந்தால் ..."ராஜ சரக்கு!". ஒவ்வொருவரும் கையில் வைத்துள்ள டம்ளர்,கப்..என்று இன்னபிற வஸ்துக்களுடன் களம் இறங்குவோம் ..அதிலும் சில senior 'குடிகள் ' பரிமாறும் mug மூலமே 'கள்' அடிக்கிற முறையில் சாத்துவார்கள். அப்படியே கலை நிகழ்ச்சிகளும் தொடங்கி விடும் .. பிடிக்காத ஆசிரியர்கள் முதல் ... 'செலவு செய்ய வைத்து டேக்கா கொடுத்த தோழிகள் ' வரை வசவுகள் சும்மா விசைகள் போலப் பறக்கும்.....அப்புறம் 'ஹிட் ஆன தமிழ் பாடல்கள் 'தூய தமிழில்' பாடப்படும்..1 % only good words ! நடு..நடுவே..மட்டும் ..மானே..பொன்மானே போல ..சில..நல்ல வார்த்தைகள் பேசப்படும் . இவ்வளவு அரங்கேறிக் கொண்டிருக்கும் நேரத்திலும் " மறக்காம சாப்பாடு சாப்டுடனும்..சாப்பிடனும் ", என்று ஞாபகமாக சில 'பொறுப்புக் குடிகள்' கடைசி வரை சொல்லிக் கொண்டே இருக்கும்., ஆனால் அந்த உணவை 4 பேர் சாப்பிட்டால் அதிகம்! அது சந்தோஷத்திலா...இல்ல 'கலவையின் ' மகிமையா ..தெரியாது ? இறுதி வரை வெறும் நொறுக்குகள் மட்டும் தான்...! இடையில் இன்னொரு விபரீதமும் நடக்கும்.."சரக்கை சமமாக பிரிச்சிகிட்ட மாதிரி நொறுக்கல்களையும்
பிரிக்க வேண்டும்", என்று ஒருவர் சொல்ல..இன்னொருவர் , " அதை வேற ஏன் தனியா வச்சுக்கணும் "என்று போதையில் தள்ளாடிக்கொண்டே.., இருக்கும் எல்லா நொறுக்கல்கள், இனிப்புகள் ("சரக்கு ரொம்ப கசக்குதுப்பா "), ..அனைத்தையும் .. கலவையில் கலந்து விடுவர் ..இப்ப கலவையே ஒரு 'கவலையோடு' இருக்கும்...அடுத்து முதல் சுற்றிலேயே விழுந்தவர் முதல் 2nd mug முடித்த வர்கள் வரை உற்சாகப்படுத்த ..full volume ல் பாட்டு போட்டு 'இரண்டாம் ஆட்டம்' ஆரம்பிக்கும்....'மப்பில்' கெத்து குறையாமல் படுத்துக் கொண்டே ஆடுபவர்களும் உண்டு..! படித்த..?அந்த 4 வருடங்களும் இப்படியே தொடர்ந்து நடந்தது...'வெள்ளந்தியாய் ' ..சந்தோஷித்த ..மறக்க முடியாத நாட்கள் அவை..!
அதே நண்பர்களை ஒருங்கிணைத்து கடந்த வாரம் "நண்பர்கள் தினம்"
கொண்டாட முடிவெடுத்தோம், அப்பொழுது நடந்த சம்பவங்கள்...இல்லை..காயங்கள்..
.அது மறக்க வேண்டியவை ..!

( +) X (-) = - .
                         புத்திசாலியா இருந்து ரொம்பக் கஷ்டப்படுவதை விட ..

                       
                        முட்டாளாய் இருந்து கொஞ்சம் கஷ்டப்படுவது நல்லது..!

                                         நாலு பேருக்கு நல்லதுன்னா...
                                 
                                        ட்ரவுசர கழட்டறது கூட தப்பில்ல..!

                                          இளிச்சவாயனுது !

இன்று உலகில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு 

நிர்வாணம் தான்..!  உடல் மட்டும் அல்ல....உள்ளமும் கூட..!