Saturday 24 November 2012

கலைப்பு கலை


அயர்லாந்தில் வசித்த நமது இந்திய பெண் டாக்டர் சவிதா அவர்கள் தான் சுமந்திருந்த கருவின் பிரச்சனையால் அதை அங்குள்ள மருத்துவமனையில் கலைக்க வேண்டிய போது , அங்குள்ள மருத்துவர்கள் அந்நாட்டு சட்டத்திட்டத்தின்படி நிர்தாட்சண்யமாக மறுத்து சவிதாவின் மரணத்திற்கு காரணமாகி விட்டதாக சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கிறது ! கருவை கலைக்கக் கூடாது என்று ...உயிரைக் கொடுத்து சட்டத்தை காப்பாற்றி இருக்கிறார்கள் ! என்னே தேச பக்தி !  இந்த காலத்திலும் .... இப்படியெல்லாம்....பத்தாம்பசலித்தனம் ! ஆனால் , இந்த விஷயத்தில்  நம் தேசம் மிக அற்புதமான சேவை அளி(ழி)த்துக் கொண்டிருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ! இது போன்ற சேவைகளை செய்யும் ஒரு பின்நவீனத்துவ பெண் மருத்துவர் ஒருவரை நான் அறிவேன் ....  

சில வருடங்களுக்கு முன்பு எனது தோழி ஒருவரை காதலியாக்கும் பொருட்டு ஒரு கடிதம் எழுத விரும்பினேன்....பிரச்சனை என்னன்னா ஏற்கனவே அவருக்கு பலர் கொடுத்து விட்டிருந்தனர் , ஆகவே தனிச்சிறப்புடன் விளங்க .... தொன்று தொட்டு பயன்படும் டெக்னிக்கான ரத்தத்தில் எழுத முடிவு செய்தேன் ! வீட்டில் ரத்த பொரியல் செய்ய அப்பா ஆட்டு ரத்தம் வாங்கி வரும் போது அதை வைத்து ...என்று யோசித்து பின்னர் அதை தவிர்த்து, உண்மையாக இருக்க வேண்டும் என எண்ணினேன் .அந்த சமயத்தில் புண்ணோ ... காயமோ வேறு இல்லா ததால் , நான் கண்டிப்பாக புதிய ஏற்பாடுகளும் ...காயங்களும் தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி ஒரு பிரபல மருத்துவமனை அருகே ஒரு மெடிக்கல் ஷாப்பில் எனது நண்பனொருவன் வேலை செய்துக் கொண்டிருந்தான் ... அவனை அணுகி ரத்தப் பரிசோதனைக்கு செய்வது போல் , நரம்பில் ஊசி சொருகி தேவையான ரத்தத்தை எடுத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றேன்...அவனும் அக மகிழ்ந்து வேலையை உடனே ஆரம்பித்து விட்டான் ! இந்த ஊசி விஷயம் மிக கவனமாக கையாளப்  பட வேண்டிய விஷயம்... விஷமெல்லாம் தேவையில்லை....வெறும் ஊசியை ....மருந்து இருப்பது போல் குத்தி விட்டாலே போதும்...உள்ளே சன்ன மாக சென்ற காற்றே ...உலை வைத்து விடும் ! ஆனால் நண்பனோ மெடிக்கல் ஷாப்பில் மருந்து எடுத்துக் கொடுக்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்துக் கொண்டிருப்பவன் ...ஒரு ஆர்வத்தில் அவன்  ஒத்துக் கொண்டாலும்...பாதி ரத்தம் எடுக்கும் போது ... air lock ஆகி ...air bubbles சோடு உள்ளே அனுப்பப் பார்த்து ...நான் பதறி .. ஒரு வழியாக நானே ..எடுத்து விட்டேன் ஊசியை.. . தேவையான ரத்தத்துடன் தான் ! ஒரு முழு வெள்ளை தாளில் எழுதும் படலம் ....குச்சி , பேனா போன்றவற்றில் .. உடனடியாக உறைந்து விடுவதால் ....விரலால் தொட்டு எழுத ஆரம்பித்தேன். I LOVE YOU ....  S ...! My true Luv ....இன்ன பிற...Bla ...Bla ! ரத்தம் கொஞ்சம் நிறையவே எடுத்து விட்டதால் .... இன்னும் மீதம் இருந்ததை கொட்ட விரும்பாமல்...இன்னொரு தாளிலும் imposition போல் அவள் பெயரை எழுதி .... தீர்த்தேன் ! எல்லாவற்றையும் மொத்தமாக பார்த்தால் ... மிக கொடுமையாக இருந்தது...ரத்தம் என்றொரு விஷயத்தால் ...கொஞ்சம் மரியாதை இருக்கும் என்று நம்பினேன் . இதை இப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போக முடியாது என்பதால் ...நன்கு காயும் வரை அங்கேயே இருக்க ஆரம்பித்தேன்,நண்பனும், "இதுக்கு ட்ரீட் வேணும் மாப்பிள்ளை  .... பிரியாணி ..! " என்று பணம் வாங்கிக் கொண்டு .... 'லஞ்ச் பிரேக்' போர்டு மாட்டி விட்டு சென்று விட்டான் . நானும் பொழுது போக்க என்று எதிரில் உள்ள மருத்துவமனையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் ! அந்த தனியார் மருத்துவமனை நம் தேசத்தின் மக்கள் தொகை குறைப்பு பணியை செவ்வனே செய்து வரும் ஒரு மனை , ஒரு பெண் மருத்துவரால் நிர்வகிக்கப்படுவது ! மிக ..மிக சிக்கலான 'கேஸுகள் ' கூட இங்கு தான் வரும்.... அந்த வகையில் அந்த மருத்துவர் "ஆயிரம் சிசு நீக்கிய அபூர்வ சிந்தாமணி " என்கிற பட்டத்திற்கூரியவர் !
இந்த கலை ப்பு பணிக்கு ...ஆண் சிசு..பெண் சிசு  என்ற பேதமில்லை ... கலைப்பே பிரதானம் .!  அவர் தொழிலில் எவ்வளவு 'சிரத்தை' எடுத்துக் கொ(ல்)ள்பவர் என்றால்.... ஒரு முறை சிசு நன்கு வளர்ந்து ....அதை நீக்கினால் மிகுந்த பாதிப்பு என்றும் ,  எங்கும் செய்ய முடியாது எனவும்  அனுப்பி விட்ட கேஸ் ஒன்றை ... மிக அனாயாசமாக கையில் உறை  அணிந்து ..உள்ளே விட்டு ....பிடித்து இழுத்து ....வராமல் போகவே....வெண்டைக்காயை செடியிலிருந்து  முறுக்கி பறிப்பது போல் ....கை..கால்களை...ஒவ்வொன்றாக பிய்த்து எடுத்து...கடைசியில் பிண்டம் மட்டும் வந்து ...தலை மட்டும் தங்கி...பின் அதனையும் ...ஏனைய உருப்படிகளோடு நெம்பி எடுத்து தன் சேவையை இனிதே நிறைவேற்றிய மகராசி  ! இவ்வளவு கஷ்டத்திலும் அந்த பெண் கதறி ....அழுது...வலிக்கிறது ...வேண்டாம் என்று அழும் போதும்....."இன்னும் நல்லா காலை விரிடீ ....அப்ப விரிக்கும் போது மட்டும் சுகமாயிருந்துச்சோ " , என்றெல்லாம் பாசத்தோடு பேசுபவர் அந்த மருத்துவ சிகாமணி ! ஆனாலும் இவர் எவ்வளவோ திட்டினாலும் ...பொறுத்துக் கொண்டு .... வேலையை முடித்துக் கொண்டு தான் ... வருபவர்களும் செல்வார்கள் ! ஏனெனில் வருபவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள்...பின்னே இருக்காதா...கணவர் வெளிநாடு சென்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இருக்கும் போதோ ....அல்லது இன்னும் திருமணம் ஆகாமல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதோ ....எப்படி குழந்தை இருக்க முடியும்....? அது நம் கலாச்சாரத்திற்கு இழுக்கல்லவோ...? அவ்வகையில் அந்த டாக்டர் நம் கலாசல் ...சாரி... கலாச்சார காவலராகவே எனக்கு தோன்றுவார் !  என் ரத்தக் கடித படலம் அன்றும் ஒரு 'கலைப்பு படலம் ' அரங்கேறிக் கொண்டிருந்தது ! யாருக்கும் தெரியாமல்....யாருக்கும் தெரியாமல் என்று ஊருக்கே தெரியும்படி சில அரை வேக்காடுகள் நடந்துக் கொள்வார்கள் ! அந்த விஷயத்தில்...நான் பார்த்த வரையில் , திருமணமானவர்கள் வயதுக்கேற்றவாறு சற்று maturityயுடன் நடந்துக் கொள்வார்கள் ! பெரும்பாலும் தனியாகவோ ..அல்லது கூட ஒரே ஒரு நபராக...ஆண் அல்லது பெண் மட்டும் வருவார்கள். சர்ரென்று ஒரு ஆட்டோவோ ...காரோ வந்து இறக்கி விட்டு சென்று விடும் ....பின் வேலை முடிந்ததும்.....வாகனம் சரியான நேரத்தில் வந்து அழைத்து செல்லும் ! வந்ததும் தெரியாது...போனதும் தெரியாது..!
ஆனால் 'கல்லூரி கலைப்பு'  இருக்கிறதே.... ஒரு குறும்படமே எடுக்கலாம் .... இந்த நிகழ்வை மட்டுமே ! அதே போல் ஒரு ஆட்டோவோ ..காரோ வந்து நிற்கும் .... ஆனால் கூடவே ...குறைந்தது இரண்டு பைக்குகளில் 3 பேர் வீதமாக பைலட் வீரர்கள் போல் வேகமாக வந்து நின்று...பின் உள்ளே யார் செல்வது என்று தயங்கி ...ஓரமாக ...வந்த வேகத்துக்கு சம்பந்தமில்லாமல் நிற்பார்கள் ! பின் சிற்சில விவாதத்திற்குப் பின்...ஒரு சித்தப்பு மட்டும் ..சம்பந்தப்பட்ட நாயகருடன் உள்ளே செல்லும் ! நான் பார்த்த அன்று ... பெண் ஏற்கனவே உள்ளே சென்று விட்டார் ....நட்பு குழாம் மட்டும் வெளியே ...வழக்கம் போல் நின்றுக் கொண்டிருந்தது ! காதலுக்கு உதவுவது போல் ...கலைப்புக்கும் உதவும் நல்ல நண்பர்கள் ! இந்த மாதிரி சமயங்களில் யார் சம்பந்தப்பட்ட பிரகஸ்பதி என்று ..மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்...மிகுந்த சோகத்துடன்...கண்களில் சற்று குழப்பத்துடன்...மிக பரிதாபமாய் ...அவ்வப்போது நண்பர்கள் வந்து..டாக்டர் பீஸ் , மருந்து - மாத்திரை , நர்சுக்கு டீ , சாப்பாடு போன்ற இன்னபிற விஷயங்களுக்கு வந்து நிற்கும் போதெல்லாம்...எதுவும் பேசாமல்...எங்கோ பார்த்தபடி மேல் பாக்கெட்...உள்  பாக்கெட் .., டிக்கெட் பாக்கெட் ...ஆகியவற்றிலிருந்து பணத்தை மௌன குருவாக கொடுத்துக் கொண்டிருப்பவர் ... சில சமயங்களில்...மோதிரம்...செயின் ! வேகமாக ... விருட்டென்று நுழைந்த பெண்கள் எல்லாம்....சொல்லி வைத்தது போல் ...திரும்பும் போது ...கரும்புச்சக்கையாய் வெளி வருவார்கள் ! வெளி வந்ததும்...மிகுந்த ஆயாச ...பாசத்துடன் ...பிரகஸ்பதியை தேடும்...அவரோ...மனசாட்சி குத்த...நெருங்கவே பயந்து...தயங்கி...தழைந்து ...நின்று பார்த்து கொண்டிருப்பார் நண்பர்களுடன் ! திடீரென்று நர்ஸ் வந்து க்ளைமாக்சை முடித்து வைப்பார்கள்..."யோவ்...என்ன வேடிக்கை பார்த்துகிட்டு நிக்கிறே...பார்த்து புடிச்சு... கைத்தாங்கலா ..பத்திரமா...இட்டுகினு போ...திரும்ப..ஏதும் பண்ணிடாத...உடம்பு தாங்காது..!", என்று அன்போடு கட்டளை இட்டதும் தான் ..நம்ம நாயகர் ,ஆதரவுடன் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார் .... ஊருக்கோ அல்லது ஹாஸ்டலுக்கோ...பைலட் வீரர்களுடன் ! இப்படி இவர்கள் போகும் போது ...ஒரு சோக வயலின் இசை ...BGM ஆக எனக்குக் கேட்டது...கூடவே ஒரு கேள்வியும் ! " எத்தனை பேர் ...இது போன்ற சம்பவத்துக்குப் பின் திருமணம் செய்துக் கொள்கிறார்கள் ... அவர்களுக்குள் ! 
    பல நாட்களாக இந்த மருத்துவ மனை விஷயங்களை நான் அறிந்து...அவ்வபோது பார்த்திருந்தாலும் ....அன்று ...முழுமையான ஒரு சம்பவத்தை அருகிலிருந்து பார்த்தது மனதை சற்று பாதித்தது....ஒரு வேளை அன்று காதல் கடிதம் எழுதிய நெகிழ்ச்சியான மன நிலையாகவும் இருக்கலாம்...!  

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது...ஆண் பெண் உறவு ..ஏன் இப்படி சிக்கலான உறவாக உள்ளது..?  நம்ம சாரு அடிக்கடி புலம்பும் செக்ஸ் வறட்சியோ ..? தேச வளர்ச்சிக்கு ஒரு புரட்சி தேவை போல் .... இதற்கும் ஒரு செக்ஸ் புரட்சி தேவையோ..? புரட்சியால் ..வறட்சி நீங்க....செக்ஸ் புரட்சிக்கு ...நீரூற்றி வேர் விட வேண்டுமா  ?

தாளில் ரத்தம் நன்கு காய்ந்து...கரித்துண்டில் எழுதியது போல் இருந்தது .... நாற்றம் வேறு ..தாங்க முடியவில்லை ! அளவோடு இருந்திருக்க வேண்டும்.!
இதெல்லாம் தேவையா...இப்படி எல்லாம் செய்து ஒரு உறவை உருவாக்க வேண்டுமா...என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து ..நண்பன் வந்ததும் வீட்டிற்கு கிளம்பினேன் !

பின் ஒரு நாள் ...perfume அடித்து அதை ஒரு greeting card ல் வைத்துக் கொடுத்து விட்டேன் !