ஒரு 'பழ' நண்பன் எங்களுக்கு இருக்கிறான் ....கோபால்.....சரக்கே தொட மாட்டான்...ஆனா அதை தாண்டி ...குறையே வைக்காம சைடு டிஷ்ஷை காலி பண்ணிடுவான் ! அவன் பண்ற அநியாயத்துக்கு ..பேசாம அவன் சரக்கே அடிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைப்போம் ! ஆனால் பாருங்க ... எல்லா சரக்கு வட்டத்திலும் இப்படி ஒரு தவிர்க்க முடியாத நண்பன் இருந்து விடுவான். இதில் ஒரே ஒரு நற்பயன் இருக்கிறது...பில்லை சரி பார்த்தல் , உடமைகளை பாதுகாப்பாக எடுத்து வைத்தல் போன்ற சிறப்பு சேவைகளை இவர் நன்றாக பார்த்துக் கொள்வார் (தண்ணி அடிக்காததால் ) என்றதொரு ஆஸ்தான நம்பிக்கை ! ஆனால் நடப்பதென்னவோ ....இவர்கள் கவனம் முழுதும் ...நொறுக்குகள் மற்றும் உணவுப் பொருட்களை கபளீகரம் செய்வதிலேயே போய் விடும் ...அப்புறம் எங்கிட்டு ..பார்த்துக்கிறது.? இதில் தலையாய கடமையான வீட்டில் கொண்டு போய் விடுதல் ... அல்லது படுக்கையில் கொண்டு விடுதல் போன்ற சேவைகளுக்கு இவர்கள் பணி இன்றியமையாத ஒன்று ! இதில் நம்ம கோபால் சிறந்து விளங்கியதால் ( வேறு வழியின்றி) ...இவன் அனைத்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களிலும் அழைக்கப்படுவான் ! இதற்க்கு தன்னை தகுதிப்படுத்தி கொள்ளவே அவன் ... 4 வீலர் லைசென்ஸ் முதற்கொண்டு எடுத்து விட்டான் (அவனிடம் கார் கிடையாது ) என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ! ஒரு முறை எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ...'புல் பூஸ்டில்' எங்களால் 'பப்பரப்பா '....என்று அழைக்கப்படும் நண்பன் ஒருவன்...காரை ஓட்டிச் சென்று ...காவலரிடம் மாட்டி கொண்டு..பெருத்த கப்பம் கட்டினான் ! அதிலிருந்து சபையில் ...'சரக்கடிக்கா தோழன்' கோபாலே போக்குவரத்தை பார்த்துக் கொள்ள முடிவானது ! அந்த உரிமையில் அவன் ப(உ)ண்ணும் அனைத்தையும் ...நாங்கள் ஜீரணித்துக் கொள்வோம்!
முதல் ரவுண்டு ஆரம்பிக்கும் போது எல்லாம் நன்றாகவே ஆரம்பிக்கும்...நாங்களும் எச்சரிக்கையா.." நண்பா...எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம் ...ஆனா பொறுமையா சாப்பிடுவோம் ...உனக்கு எது வேணும்னாலும் நீ ஆர்டர் பண்ணிக்க " என்று சொல்வதெற்கெல்லாம் மண்டைய ஆட்டி விட்டு ...வழக்கம் போல அட்டகாசத்தை ஆரம்பித்து விடுவான் ! டிஷ்கள் வந்ததும் அவன் விரல்கள் நர்த்தனம் ஆட ஆரம்பித்து விடும்....சட்..சட்டென்று...சினிமாவில் காட்டுவது போல் தட்டில் குறைய ஆரம்பிக்கும் ....முதல் ரவுண்டை முடித்து விட்டு பார்த்தால் ..தட்டில் பேருக்கு கொஞ்சம் துணுக்குகளும் ...சில எலும்பு துண்டுகளும் மட்டும் இருக்கும் ! இவ்வளவையும் செய்து விட்டு ..தனக்கும் ..இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ..ஒரு முகத்தை வச்சுக்கிட்டு உட்காந்திருப்பான் பாருங்க ....காண கண் கோடி வேண்டும்..! சரி அடுத்த ரவுண்டில் கவனமா இருக்கணும்னு .."மச்சி இது முழுசா உனக்கு மட்டும் தான் ... இது நாங்க சாப்பிடறதுக்கு ", என்று நண்பர்கள் நாகரீகமாக கோடிக்காட்டி விட்டு இரண்டு முழு தந்தூரி கோழி சொல்வார்கள்..! ஒன்றை முழுதாக நண்பனுக்கு அர்ப்பணித்து விட்டு ...இன்னொன்றை மற்றவர்கள்...தனியாக ...பாதுகாப்பான எல்லையில் வைத்து விட்டு ...தீர்த்தவாரி ஆரம்பிப்பார்கள். தந்தூரி ..ஏனைய டிஷ்ஷை விட கொஞ்சம் பொறுமையாகவே சாப்பிட முடியும் என்பதால் இந்த ஏற்பாடு ! நினைத்தது போலவே ..அது சற்று மெதுவாகவே காலியாக ஆரம்பிக்கும்...ஆனால் எல்லாம் சிறிது நேரம் தான் ..பின் வழக்கமாக வேகம் ஆரம்பித்து விடும்.
இந்த இடத்தில கூட இவ்ளோ டென்ஷனா என்று நான் காந்தியீய வழிப்படி கொண்டக் கடலை சுண்டல்,வெஜ் .சாலட் ,கடலை மற்றும் பருப்பு வகைகளோடு போதும் என்று....சிற்றின்பத்தில் இருந்து விடுவேன். ஏனெனில் , எங்கள் வீட்டில் சாம்பார் வைப்பது தான் அதிசயம்...தினந்தோறும் அசைவ உணவுத் திருவிழா தான் ..அதனால் நான் இந்த ஆட்டத்தில் ஒதுங்கி விடுவேன்.போட்டியே கோவாலுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் தான்! அதிலும் அந்த பப்பரப்பா நண்பனுக்கும் ...இவனுக்கும் நடக்கும் உணவுப்போர் இருக்கிறதே...சொல்லி மாளாது ! பப்பரப்பா நண்பன் உயர்தர சைவ ஆச்சார குடும்பத்தை சேர்ந்தவன்...இது மாதிரி வெளியில் வந்தால் தான் அவனுக்கு வாய்ப்பே ! அதனால் ..நிதானமாக ..ரசித்து...ருசித்து ..சாப்பிட விரும்புவான் , ஆனால் அவனுக்கு சரியான 'கவுண்ட்டர்' கொடுப்பான் கோபால்! அதுவும் 'பேபி சிக்கன் ரோஸ்ட்' என்றால் அத களம் தான்...! உயிருடனேயே ..ஒரு கிலோவிற்கும் குறைவாக இருக்கும் இளங் கோழியை ..உரித்தால் ..முக்கால் கிலோவிற்கும் குறைவாகவே இருக்கும் ... அதை கொஞ்சமாக வேக வைத்து ...பின் சிறிது மசாலா கலந்து அப்படியே பொறித்து விடுவார்கள். எண்ணெயை எல்லாம் சுத்தமாக வடிக்கட்டி விட்டு ...பொர பொரவென்று ...பகோடா போல இருக்கும் ... ஒன்று கூட மிஞ்சாது...எலும்பைக்கூட ..காராசேவை போல மென்று தின்று விடலாம் .. அவ்வளவு சுவை ! பொறுமையாக ரசித்து சாப்பிட முடியாத கடுப்பில் பப்பரப்பா நண்பன் " டேய் கோழிக்கு பொறந்தவனே....கோழியவே கல்யாணம் பண்ணிக்கடா ... இப்படி காலி பன்றியடா..!" , என்றெல்லாம் ...நக்கலாகவும் ...கோபமாகவும் திட்டினாலும் ...நம்ம ஆளு கண்டுக்காம வேலையப் பார்ப்பான்! எனக்கே சில சமயம் சந்தேகம் வரும் ...எப்படி எவ்வளவு சாப்பிட்டாலும் ...திரும்ப..திரும்ப...இவனுக்கு உள்ளே இறங்கிகிட்டே இருக்கு..?...உள்ளே ஏதாவது கிரைண்டர் போல அரைக்குமோ என்று ! சாப்பாடு சாப்பிட்டால் கூட ' தொட்டுக்க ' என்கிற concept இவனிடம் செல்லுபடியாகாது....சைடு டிஷ் தான் மெயின் டிஷ்ஷே !. சோறு தான் தொட்டுக்க..! யாராவது கடிச்சி வச்சி இருந்தாக் கூட கவலைப்பட மாட்டான்..."நமக்குள்ள என்னடா..". எல்லோரும் அலெர்ட் ஆகி ..அவனுக்கு வாய்ப்பே கொடுக்காத போது...திடீரென்று ஒரு அதிரடி விஷயம் சொல்வான்..! " ..... அவள நம்ம கார்த்தி ...மேட்டர முடிச்சிட்டாண்டா..." , ".... அவரப் பார்த்து...டியுஷன் சேர்ந்தா...செமெஸ்டர கிளியர் பண்ணி விட்டுட்ராராம் !" , இது போன்ற அதிரடி விஷயங்களை..... பிரம்மாஸ்திரங்களை ஏவுவான்...நண்பர்களும் வாய் பிளந்து கேட்கும் சமயத்தில் ..இங்க மேட்டரை முடித்து விடுவான் !
இவனை வஞ்சம் தீர்க்க ...இவனது திருமணத்தின் போது ... நண்பர்கள் கூடி ஒரு வேலை செய்தார்கள் ! பொதுவாக எங்கள் நெருங்கிய வட்டார நண்பர்களுக்கு ... திருமணம் முடிந்து ..முதலிரவுக்கு முன்னால் வழியனுப்பும் படலத்தின் போது ..ஏதேனும் ...பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம் ...Perfumes , Imported condoms , long lasting sprays என்று கொடுத்து கலாய்ப்போம். இவனுக்கு 'பேபி சிக்கனை' அழகாக 'கிப்ட் பேக்' செய்து ...ரூம் வாசலில் நுழையும் போது கொடுத்து விட்டு வந்தோம் ! ஒரு தமாஷுக்காக இதை செய்தாலும் ."..நண்பன் ...என்ன நினைப்பானோ...அவன் மனைவி இதைப் பார்த்து கிண்டல் செய்து ...எங்கள் மேல் கோபப்படப் போகிறானோ ", என்றெல்லாம் யோசித்துக் கொண்டே ...மறுநாள் அனைவரும் பார்க்க சென்றோம். "மச்சான் ..இந்த வாரம் முழுக்க நலுங்கு ....விரதம் ..கல்யாணம்னு... வெறும் வடை ,பாயசமா சாப்பிட்டு நாக்கே செத்துப் போயிருந்தது...நேத்து நம்ம அயிட்டத்தை சாப்பிட்டு தான் ...சந்தோஷமா வேலையே முடிஞ்சுது .. ரொம்ப தேங்க்ஸ் டா ...!" என்றான். நாங்களும்...பொண்ணுக்கு கொஞ்சமாவது கொடுத்தியா...என்று கேட்க நினைத்து ..கேட்கவில்லை...அவனும் இது வரை சொல்லவில்லை..!
No comments:
Post a Comment