Monday 10 June 2013

சிறுவர் கதை @ 18+



சிறுவர் கதை தான் இருந்தாலும் .... வயது வந்தவர்க்கு மட்டும் !


வீட்டிலிருந்து பள்ளிக்கு போகும் வழியிலேயே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது.செல்லும் வழியில் உள்ள வீடுகளின் தோட்டங்களில் நந்தியாவட்டை,செம்பருத்தி,தும்பை போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் .அவையெல்லாம் "பறிச்சிக்கோ ...பறிச்சிக்கோ", என்று கூவுவது போல் இருக்கும் ! நானும் அதற்கு செவி சாய்த்து நண்பர்களுடன் சேர்ந்து பறித்துக் கொண்டு செல்வோம் . பறித்த பூக்களை என்ன செய்வது? ...நேராக கோவிலில் உள்ள பலிபீடம் அருகே வைத்து விடுவோம்.இது தினப்படி நடைபெறும் ஒரு சமாச்சாரம் ! பெரிய பக்த சிரோன்மணிகள் எல்லாம் கிடையாது....சும்மா ஏதாவது பரபரப்பா செய்ய வேண்டும் ...அவ்வளவு தான் !

ஆனால் பரீட்சை நேரங்களில் மட்டும் ...பக்தி ரசம் பிய்த்துக் கொண்டு ஆறாக ஓடும் ! ஏனைய சமயங்களில் பறித்த பூக்களை மொத்தமாய் ஓரிடத்தில் போட்டு விட்டு செல்லும் நாங்கள்.... தேர்வு நேரங்களில் மட்டும்....அந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு தெய்வமாக தேடிச் சென்று பூக்கள் வைத்து விட்டு வருவோம்.துவாரபாலகர்கள் மற்றும் பாலகிகளே அன்று பூக்களால் ஜொலிப்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ! பின்னே...ஒரு சாமிக்கு விட்டு விட்டால் கூட ...மார்க் குறைந்து விட்டால் ?! இது போன்ற சமயங்களில் ...பூ வேட்டைக்காக ... உயரத்தில் இருக்கும் பூக்களையும் பறித்தால் தான் போதுமானதாக இருக்கும்.ஆகவே...வீடுகளின் ஓரமாக இருக்கும் மதிலின் மேல் ஏறி ...நடந்து சென்று...எக்கி ...எம்பி குதித்து ...'உயிர் பணயம்' வைத்து பறிப்போம் ! வீட்டுக்காரர்கள் பார்த்து விட்டு கத்தும் போது ... சாகஸ வீரர்களாக குதித்து தப்பி ஓடுவோம் ! ஏனைய சிறுவர்களை விட எங்கள் குழு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில் உள்ளூர கர்வமும் உண்டு ! ஆனால் பின்னாளில் மார்க் ட்வைனின் , 'டாம்சாயர் ..'ஹக்கிள் பெர்ரி பின் ' போன்ற உலக காவியங்களை படிக்கும் போது ...எங்கள் சாகஸமெல்லாம் ஒன்றுமில்லை என்று தோன்றியது !

அந்த வயதுகளில் எப்போதும் மனதில் நிறைய கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கும்....கேள்விகளின் நாயகனாக இருப்பதால்....பெற்றோர் முதற்கொண்டு உறவினர், ஏனையோர் யாவரும் என்னைக் கண்டாலே... 'விளக்கினில் கை வைத்த பிள்ளை வெடுக்கென இழுத்தது போல்' ஓடி விடுவர் ! இருப்பினும் ...ஒரு கட்டுபெட்டியான 'கான்வென்ட்டில் ' இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே...காமன் அருளால் ...நண்பன் 'நட்டு' மூலம் .. 'குழந்தை பிறக்க என்னென்ன உழைக்கணும் ....எங்கெங்க விடனும் ' ... போன்ற 'ஒலக' உண்மைகளை தெரிந்துக் கொண்டேன் ! (அந்த சம்பவத்தை பற்றிய எனது பழைய பதிவிற்கான சுட்டிhttps://www.facebook.com/kaattaan/posts/275993059167708...படித்து இன்புறுக ! ) முக்கிய விஷயத்தை தெரிந்துக் கொண்டாலும் ...பள்ளி மாறி விட்டதால் .. மேலும் பல கிளை விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியாமற் போய் விட்டது ! ஆனால் படித்த 'கான்வென்ட்டை' விட அடுத்து சேர்ந்த அரசு பள்ளியில் ... நல்லதொரு சுதந்திர சூழ்நிலைகள் , நண்பர்கள் அமைந்தனர்....ஏனைய கேள்விகளுக்கும் விடை தெரிய !

கிளை விஷயங்களான.... 'வயதுக்கு வருதல், குழந்தை பிறக்காமல் இருக்க கர்ப்பத்தடை '...போன்ற விஷயங்கள் மட்டும் சற்று குழப்பமாகவே இருந்து வந்தது . வயதான பெண்கள் குழாம் ஒன்று பக்கத்து வீட்டு அக்காவை ," அவ பெருசாயிட்டா , வயசுக்கு வந்துட்டா ..",என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது .சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று நேரடியாக ...அந்த அக்காவிடமே போய் ..."அக்கா ..நீங்க பெருசாயிட்டீங்க . .அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க...ஆனா நீங்க பெருசாகாம...அப்படியே தான் இருக்கீங்க... வயசுக்கு வந்துட்டீங்கன்னும் சொல்றாங்க ...அப்படின்னா என்ன?, என்றேன் ! பூமா அக்காவின் முகத்தில் ... கோபம்,வெட்கம்,எரிச்சல் ...என்று நவரசங்களும் வந்தன.."ப்..ச்ச்... போடா...என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் ! நான் எப்போதும் போல் விடாக்கொண்டனாக " ராட்சஸி மாதிரி திடீர்னு ஒருநாள் நீ வளர்ந்து பெருசாகி...."பூமா பெரியவளாயிட்டா",அப்படின்னு அசரீரி குரல் ஒலிக்குமா ..? ", என்றெல்லாம் 'அம்புலிமாமா ' பாதிப்பில் நான் கேட்டதும் பூமா அக்கா செம கடுப்பாகி அடிக்க வர ..நான் 'எஸ்கேப்' ! இருந்தாலும்...லைப்ரரி மற்றும் கடைகளில் ....' பெருசாயிட்டாள் ...வயதுக்கு வயசுக்கு வந்துட்டாள் ' பற்றிய புத்தகங்களை தேடினேன்...தேடினேன்....நூலக ஓரம் வரை தேடினேன் ...அப்புறம் கிடைக்காமல் நின்று விட்டேன் ! சரியான தலைப்புடன் தேடவில்லை என்று ..சில...பல...களப் பணிகளுக்குப் பின் புரிந்துக் கொண்டேன் ... சரியான வார்த்தை 'மாத விலக்கு' என்று ! கேள்வி ஞானத்துடன் சுற்றிய ஒரு பாலகனை ...பேச்சு தமிழ் ,உரைநடை என்று இரண்டாக பிரிந்து வைத்து குழப்பி இருக்கிறது இந்த சமூகம் !...குறிப்பிட்ட புத்தகத்தை படித்து சகலமும் தெரிந்துக் கொண்டேன். இருந்தாலும், கர்ப்பத்தடை விஷயம் என்பது மட்டும் .... சில அறுவை சிகிச்சை முறைகள் , மருந்துகள் மற்றும் சாதனங்கள் என்று பொதுவாக படிக்க முடிந்ததே தவிர விலாவாரியாக தெரிந்துக் கொள்ள முடியவில்லை !

இந்த சமயத்தில் தான் ...நிரோத் - கருத்தடை சாதனம் என்று பார்க்குமிடமெல்லாம் ...நிரோத் விளம்பர புராணமாகவே இருந்தது ! கையகல மஞ்சள் கவரில் ஒரு சிகப்பு முக்கோணம் போட்டு ...அதில் ஒரு ஆணும் பெண்ணும் மூக்கோடு மூக்கு வைத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள் ...'க்ளோஸப்பில்' ! ஆணும் பெண்ணும் மூக்கோடு மூக்கு வைத்து இருக்கும் அந்த 'போஸ்' கலவி சாஸ்திரத்தில் மிக முக்கியமான ஒன்று ...பொருத்தமாக அதை 'டிசைன்' செய்த நபரை நினைத்தால் இப்போது ஆச்சரியமாயிருக்கிறது ! கேபிள் டிவி வந்த புதிதில் ..சன் டிவி மட்டும் தான் பிரதானமாக இருந்து வந்தது...அதன் தாக்கத்தில் ...கேபிள் டிவி 'கனெக்சன்' என்றாலே...இன்றும் சன் டிவி கனெக்சன் என்று தான் பலரால் அழைக்கப்படுகிறது ! அதே போல் 'காண்டம்' (சுந்தர காண்டம் அல்ல) என்பதே நிரோத் என்று தான் இன்றும் அழைக்கப்படுகிறது !
"உள்ளே அது எப்படி இருக்கும்?", என்கிற ஆவலில்....கடைக்காரர்களிடம் விசாரித்தும்...சில சமயம் காசு கொடுத்து கேட்டும் பார்த்தேன் ! "மொளச்சு மூணு இலை விடலே, அதுக்குள்ளேயா ... ஓடறா .... ", என்று என் கேள்வி அறிவை விரட்டியடிக்கும் சம்பவங்கள் தான் நடந்தன !

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாள் முட்டை வாங்குவதற்காக கடைக்கு சென்று...கடைக்காரர் கட்டி கொடுக்கும் வரை நின்றுக் கொண்டிருந்தேன் ! அனிச்சையாக எனக்கு முன்னே வைத்திருந்த ஒரு பெட்டியில் கையை வைத்துக் கொண்டு....சாவதானமாக உள்ளே இருந்த தூளை ...நினைவில்லாமல் எடுத்து வாயில் வைத்து மென்று தின்று விட்டேன் பாக்கு மாதிரி இருந்தது ! சட்டென்று நினைவிற்கு வந்து ...தூள் இருந்த பெட்டியை தூக்கி பார்த்தேன் ..தூக்கி வாரிப் போட்டது ! அது மொத்தமாக நிரோத் கவர்களை வைத்திருக்கும் பெட்டி...ஐய்யய்யோ ..அந்த கருத்தடை மருந்தை சாப்பிட்டு விட்டேனா...என்ன ஆகப் போகுதோ....எனக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுமோ...வீட்ல சொன்னா..இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு ...உதை விழுமே ...நாமே டாக்டர்கிட்டே போகலாமா...", என்றெல்லாம் பலவாறு யோசித்து....இருண்ட முகத்துடன் ..குழப்பத்துடன் வீட்டையடைந்தேன்.அப்பா அம்மாவை பார்க்கவே மனசுக்கு கஷ்டமாக இருந்தது ... அவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் ...நினைக்க நினைக்க அழுகையே வந்தது ! பின் ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு....ஆனால் ஒரு குழப்பத்துடனேயே இருந்து வந்தேன் .

பக்கத்து ஊரிலிருந்து புதிதாக ஒரு மாணவன் எங்கள் குழுவில் சேர்ந்துக் கொண்டு நண்பனானான்.அவன் பேருந்து நிலையத்திலிருந்து வரும் வரை காத்திருந்து ...எங்கள் பள்ளி செல்லும் படலம் தொடரும்.காத்திருத்தலுக்கு ஒரு விசேஷ காரணமிருந்தது..தேன் மிட்டாய் , கடலை மிட்டாய் போன்றவற்றை ஒன்றோ இரண்டோ தான் வாங்கி சாப்பிட முடியும் ... ஆனால் புதிதாக வந்த நண்பனோ ...அவைகளை பாக்கெட்..பாக்கெட்டாக கொண்டு வந்து ...எங்களுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்வான்."எதுடா...இத்தனைக்கும் காசு ?", என்று கேட்டதும் தான் அவன் பெற்றோர்கள் வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவது தெரிந்தது ! எனக்கு குபீரென்று ஆர்வம் கிளர்ந்து...நிரோத் பற்றிக் கேட்டேன்."...ப்பூ அதுக்கென்னடா ...எத்தனை பாக்கெட் வேண்டும்?" ,என்றான் பந்தாவாக ! "அவ்வளவெல்லாம் வேண்டாம் எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் எடுத்து வாடா ",என்றேன்.கண்டிப்பாக நாளை எடுத்து வருவதாக சொல்லி விட்டு...பேருந்துக்கு நேரமாகி விட்டதால் வேகமாக விடைபெற்று கொண்டான் ! சொல்லொன்னா மகிழ்ச்சியுடன் வீட்டையடைந்தேன்.இருப்பினும் ஒரு குழப்பமும் இருந்தது...ஒரு வேளை பிரித்ததும் ...நான் சாப்பிட்ட பாக்கு தூள் போன்ற 'கருத்தடை வஸ்துவாகவே' இருந்து விட்டால்.?..உண்மையிலேயே அன்று இரவு முழுதும் ஒரு கதம்பமான மனநிலையிலேயே தூங்கி விட்டேன்.

மறுநாள் விடியல் எனக்காகவே விடிந்தது போல் இருந்தது...."நண்பன் வருவானா ...? மறக்காமல் கொண்டு வருவானா?", என்றெல்லாம் பதை பதைப்புடன் காத்திருந்தேன் ....ஆனால் அவன் வந்ததும் என்னைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகை பூத்ததிலேயே கொண்டு வந்திருப்பது உறுதியாயிற்று ! அடுத்து...அதை நிதானமாக பிரித்து பார்க்க ஒரு இடத்தை யோசித்தோம் ... உடனே பார்க்க தோதாக...பள்ளி செல்லும் வழியில் உள்ள...பூக்கள் வைக்கும் கோவிலின் உள்ளே .... வலம் வரும் போது தென்படும் ஒரு பாழும் மண்டபம் என்று முடிவாயிற்று.கோவிலில் இந்த தவறை செய்வதற்கு பிராயச்சித்தமாக 'எக்ஸ்ட்ரா' பூக்கள் சாமிக்கு வைத்து விடலாம் என்றும் சபையில் முடிவாயிற்று ! மேற்கூறிய இடத்தை அடைந்து ...நண்பனிடமிருந்து நானே வாங்கி பிரிக்க ஆரம்பித்தேன்...பிரிக்கும் போதே தூள் போல் எதுவும் நெருடாதலால் ... குதூகலத்துடன் பிரித்து முடித்தேன்.
:
"டேய்...என்னடா...இது பலூன் மாதிரி இருக்கு....கடையில ஏதாவது மாற்றிக் கொண்டு வந்துட்டியா...?"

"இல்லடா...நிரோத் இப்படித்தான் இருக்கும் ...இங்கே பார்....இப்படி மாட்டிக்கணும் ", என்று சொல்லி ...இல்லாத குறியை...இருப்பது போல் அபிநயித்து ஒரு மினி ' டெமோ '
காட்டினான் ,கொண்டு வந்த நண்பன் !

நான் ஆச்சரியத்துடன்,..."இவ்ளோ நீட்டமா இருக்கே...எப்படிடா ஒவ்வொருத்தங்களுக்கும் இது பொருந்தும் ?", என்று கேட்க ,,, நண்பன் சலிப்புடன் "ஏய் ...மாட்டிக்கிட்டதும் தேவையான அளவு வச்சுகிட்டு ...மிச்சத்தை சுருட்டிக்க வேண்டியது தான் !", என்று சொல்லும் போது நாங்கள் ஆறாப்பு படித்துக் கொண்டிருந்தோம்.

பாலர் கதை முற்றிற்று !

No comments:

Post a Comment