Monday 10 June 2013

நீரால் கெடும் !



தண்ணீர் 'பாக்கெட்' முதல் முதலில்..... சென்னையில் ஒரு இளைஞரின் சிந்தனையால் உருவாக்கப்பட்டது ! அதற்கு முன்பு வரை 'பாண்டிச்சேரி' மற்றும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பார்கள் ! தூய்மை என்கிற விஷயத்தை தாண்டி , ஒரு status symbol ஆகத்தான் அப்போது விளங்கியது ! பயணங்களின் போது ... ஒரு கையில் 'பாட்டிலை' பெருமை பொங்க ஏந்திக் கொண்டிருப்பார்கள் கனவான்கள், சீமாட்டிகள் !

இதற்கு 'ஆப்பு' வைப்பது போல் .... ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக 'வாட்டர் பாக்கெட் ' வந்ததும் ஒரு மாபெரும் புரட்சியே ஏற்பட்டது ! மக்களிடம் சோம்பேறித்தனம் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்த நேரம் .... சட்டென்று இது பற்றிக்கொண்டது ! பழைய பாட்டிலில் நிரப்பிக் கொண்டு எடுத்து போகவும் சோம்பல்...போகும் இடத்தில் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கவும் தயக்கம் .... இந்த சூழ்நிலையில் சல்லிசான விலையில் போகுமிடங்களில் எல்லாம் எளிதாக கிடைக்கும் இந்த 'பாக்கெட் மேட்டர் ' நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கியது !

உண்மையில் ...'தூய நீர்' என்கிற விஷயத்தை விட....உபயோகிக்க வசதியாக இருக்கிறது என்பதில் தான் இதன் வியாபாரமே இங்கு இருப்பதாக உணர்கிறேன் !

பற்களால் கடித்து ... சிறிய ஓட்டையை போட்டு பெரும்பான்மையோர் உறிஞ்சும் அழகை பார்க்கும் போது.... பட்டினத்தாரின் "கறந்த இடத்தை நாடுதே ...." வரிகள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை....இதில் அனைத்து வயதினரும் ...பாலினரும் அடக்கம் ! இது தவிர 'மிக்ஸிங்க்கு' வேறு மிக அற்புதமாக துணை புரிவதால் ... இதன் கணிசமான வளர்ச்சிக்கு 'டாஸ்மாக்குக்கு' பெரும் பங்கு உண்டு !

ஆரம்பித்த சில நாட்களிலேயே 'தண்ணீர் பை' வியாபாரம் பிய்த்துக் கொண்டு செல்வதை பார்த்து அரண்டு போன 'தண்ணீர் புட்டி ' நிறுவனங்கள் .... அந்த இளைஞர் மேல் வழக்கு தொடுத்தது ! புட்டி நிறுவனங்கள், mineral water என்று விற்பனை செய்து வந்தன .... பாக்கெட் தண்ணீரில் 'மினரல்' இல்லை என்று வாதிட்டன ! "தண்ணீர் என்றாலே மினரல் கலந்தது தான்...ஆகையால் அனைத்துமே mineral water தான்", என்றெல்லாம் எதிர் வாதமிட்டு ... வெற்றிகரமாக வழக்கிலிருந்து வெளி வந்தது வாட்டர் பாக்கெட் நிறுவனம் !ஆனால் அதன் பிறகு ... packaged drinking water என்று போட்டு தான் ... உஷாராக பல 'பாக்கெட்' நிறுவனங்கள் விற்கிறது ! இப்போது என்னடாவென்றால் ... பாட்டிலிலேயே 'packaged drinking water ' என்று தான் போட்டு விற்கிறார்கள் .... Minerals காணவில்லை ! இப்படிப்பட்ட தண்ணீருக்கு அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம் ! பாதுகாக்கப்பட்ட குடி நீர் என்று விற்பதற்கும் .... வெறுமனே ... நிரப்பப்பட்ட குடி நீர் என்று எழுதி விற்பதற்கும் வித்தியாசமிருக்கிறதல்லவா ?

1 ரூ. என்று நமக்கு விற்கும் போதே ... 0.25 பைசா முதல் நாற்பது பைசா வரை தான் கடைகளுக்கு நிறுவனங்கள் விற்கும் ! இப்போதும் அடக்க விலை 1 ரூ.க்கு கீழே தான் என்றாலும் 2ரூ. , 3 ரூ. போய் ... நேற்று சென்னையில் .... பெரும்பான்மையான தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களின் சேவை நிறுத்தத்தால் ரூ.7 வரை விற்றிருக்கிறார்கள் இந்த so called drinking water ஐ !

"தில்லை நீரால் கெடும் " என்று ராமலிங்க அடிகளார் கூறினார்....தில்லை மட்டும் அல்ல ... நாடே 'பீரால்' கெடுவதை விட நீராலே தான் மிக கெடும் போல !

No comments:

Post a Comment