Tuesday, 5 March 2013

ஆயுத பூஜை


தலைமைப் பண்பு என்பது இயற்கையாக ...பிறப்பிலேயே உருவாகுவதா அல்லது வளர்ப்பில் ஏற்படுவதா என்கிற வாதம் ....உலகளவில் முடிவுறாத வாதமாக இன்று வரை இருந்துக் கொண்டிருக்கிறது.அதில்... நிபுணத்துவம் என்கிற விஷயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.தலைமைப் பண்பு என்பது எப்படி இயற்கையாகவே சிலரிடம் அமைந்து இருப்பது போல் ..பல நிபுணர்களும் பிறப்பிலேயே உருவாகி விடுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒரு சிறு சம்பவம் , வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் விஷயங்களில் அதி முக்கியமான ஒன்று மது வகைகள்...அதில் அதிகம் கோலோச்சுவது 'ஜானி வாக்கர் ' என்று அனைவராலும் கொண்டாடப்படும் சரக்கு ! சராசரியான ஒரு விலையில் (இப்ப கொஞ்சம் ஏறிடுச்சு) ஓரளவு மரியாதையான சரக்காக கருதப்படுகிறது.ஆளுக்கு ஏற்றார் போல் வாங்குவதற்கென்று .... ரெட்,ப்ளாக் ,கிரீன்,ப்ளூ லேபல் என்று பல வகைகளில் விற்கப்படுகிறது.இதில் ப்ளூ லேபல் 1/2 பாட்டிலே 4,000 ரூ.என்கிறார்கள்.Red Label புல் பாட்டிலே ஆயிரத்து சொச்ச ரூபாயில் வாங்கி விடலாம்.உலகத் தரம் வாய்ந்த சரக்கு இந்த விலையில் கிடைப்பதால் ,வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களின் எதேச்சதிகார சரக்காக கொண்டாடப்படுகிறது !

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வினோதமான பிரச்சனை ஏற்ப்பட்டது...சென்னையில் 'ஜானிவாக்கரை' மொத்தமாக விற்பனை செய்பவர்களிடமிருந்து சிறு வியாபாரிகள் வந்து, சரக்குகள் வாங்காமல் தேங்க ஆரம்பித்து விட்டன...ஆனால் சிறு வியாபாரிகள் எப்போதும் போல் சரக்கை விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு சரக்கு எப்படி கிடைக்கிறது என்று கேட்ட போது விமான நிலையத்திலேயே சில ஏஜென்ட்கள் .... அங்கிருந்து வருபவர்களிடம் பணத்திற்கு வாங்கி வந்து இங்கு விற்று வருவதாக கூறியுள்ளனர்.மொத்த விற்பனையாளர்களும் இதே முறை .. மற்றும் 'குருவி' மூலம் தான் சரக்குகளை பெற்றுக் கொள்வதாக கேள்வி ! இந்த மாதிரியான சூழ்நிலையில் .. கம்பெனிக்கே அதன் விற்பனையில் குறைவு இருப்பதாக உணர்ந்து அதன் Representative ஐ இங்கே அனுப்பி இருக்கிறது...அவரும் இங்குள்ளோர் சொல்லுவதைக் கேட்டு விசாரித்து உள்ளார். அப்போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது .... வியாபாரிகள் மற்றும் பலருக்கு விற்பனை செய்ததது ஒரே ஆள் தான் என்பது தான் அது ! பொறி வைக்கப்பட்டது...ஆள் பிடிப்பட்டார்.. ! அவரை விசாரித்த போது கிடைத்த தகவல்களை கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர் ! நூற்றுக் கணக்கான பாட்டில் சரக்குகளையும் அவரே தயாரித்து விற்று வந்திருக்கிறார்.அவர் கையில் இருந்த சில சரக்குகளை சோதனை இட்டு அசந்து போயினர் ...Rep .பையும் சேர்த்து ! கொஞ்சம் கூட அவர்களால் போலி மது என்று சொல்ல முடியவில்லை ! அவ்வளவு தரத்துடன் விளங்கி இருக்கிறது .... ஆர்வம் அதிகமாகி அவரை அழைத்து கொண்டு அவரது குடிசை தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார்கள் ... அங்கு மிக சாதாரணமான ஒரு வீட்டில் 'கலவை' தயாரிக்கப் பட்டுகொண்டிருந்தது ! ஒரு பெரிய அண்டா...அதன் பக்கத்தில் சிறு..சிறு...குண்டான்களில் சில..சில வஸ்துக்கள்... அந்த அண்டாவில் உள்ளதை கரைப்பதற்காக ஒரு பெரிய கிண்டியுடன் ஒரு 'கரைப்பாளர்....! இவ்வளவு தான் தொழிற்சாலை ! இவற்றை வைத்து கொண்டு உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனத்துடன் போட்டி போட்டுள்ள அவர் பள்ளி இறுதியை தாண்டவில்லை ! எப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது,அவர் கலவை ரகசியத்தை சொல்லாவிட்டாலும் ... அதில் ஒரிஜினல் ஜானிவாக்கரும் .. கொஞ்சூண்டு மூலப் பொருளாக சேர்ப்பதாக மட்டும் கூறியிருந்தார் ! நம்ம "மூலிகை பெட்ரோல் .. ராமர் பிள்ளை " ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல !

Perfume என்றொரு பிரெஞ்சு படம்...அதில் கதாநாயகன் பிறந்த நொடியே ..கண்கள் கூட திறக்க திறந்திருக்காது...ஆனால் அருகில் உள்ளவரின் விரலை ..சரியாகப் பிடித்து ... நிதானமாக முகர்ந்து பார்ப்பான் ! அவனுக்கு பார்வையை தாண்டிய புலனாக.... நுகரும் சக்தி இருக்கும் ... எப்படி என்றால்...அவன் கண்ணை மூடி, படுத்துக் கொண்டே ...பக்கத்தில் உள்ள செடி, புல் ,..நீர்நிலை...கூழாங்கல் ...என்று தொலைவில் உள்ள பொருட்களை கூட மோப்பத்தின் மூலம் கண்டுக் கொண்டு, சொல்லிக் கொண்டே இருப்பான் ! வாசனை திரவம் தயாரிக்கும் ஒரு மிகப் பெரிய வல்லுனரை சந்தித்து ..வேலைக்கு சேர கோருவான் ! இவன் தோற்றத்தைப் பார்த்து ...திறமை அறியாமல் ...அவன் எதிரே...ஒரு கண்ணாடி குப்பியில் ...பல தரப்பட்ட வஸ்துகளை ...மிக கவனமாக..சிறிது ..சிறிதாக சேர்த்து ...ஒரு அற்புத வாசனை திரவத்தை செய்துக் காட்டி விட்டு ....இதற்கு தான் பல ஆண்டுகள் உழைத்ததாக சொல்வார் ! நம்ம கதாநாயகன் .. அதை நன்கு முகர்ந்து விட்டு .. . பின் ஒரு காலி குப்பியை எடுத்துக் கொண்டு...ஒரு பெரிய பாத்திரத்தில் .. தாறு மாறாக ...பல குடுவைகளிலிருந்து ...ரசங்களை மாற்றி..மாற்றி..ஊற்றி ...அதில் கூட ..குறைத்து ...பின் அந்த குப்பியில் ...ஒரு சில வினாடிகளில் ...வல்லுனர் தயாரித்த நறுமண திரவத்தை விட சிறப்பாக தயாரித்து ...வேலைக்கு சேர்ந்து விடுவான் !

போலி மதுவை தயாரித்த அந்த மனிதர் , செய்தது தவறு என்றாலும் .. அவரது திறமையை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது ! அவரது தவறுக்கு தண்டனை கொடுக்கும் சமூகம்...அவரது திறமைக்கு அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் ! என்னைக் கேட்டால் ஜானிவாக்கர் கம்பெனியிலேயே R & D பிரிவில் ஒரு கௌரவ ஆலோசகர் பதவி கொடுத்திருக்கலாம் , கம்பெனிக்கு நிச்சயம் உபயோகமாயிருந்திருக்கும் ! சரியான அங்கீகாரம் கிடைத்திருந்தால் .. அவர் அந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் ! ஆனால் இங்கு நம் நாட்டில் ...வாழ்வாதாரத்தை ஓட்டுவதற்கு ...என்பதை விட நன்கு சம்பாதிப்பதற்கு அவசியம் டிகிரி முடிக்க வேண்டும் ..என்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது ! நான் எதற்கு BE ., EEE ..எடுத்து படித்தேன் ..என்று இன்று வரை ..எனக்கு புரியவில்லை.! அது சமயம்...பொறியியல் அல்லது மருத்துவம் படித்தால் மட்டுமே...வாழ்க்கையில் உயரலாம் என்று எடுத்துக் கொடுக்கப்பட்டது ...சுற்றத்தார் மூலம் ! "நான் படிச்சதுக்கும் ...செய்யற வேலைக்கும் சம்பந்தமேயில்லை ", என்று சொல்லி கொள்ளும் லட்சக்கணக்கான அடியார்களுள் ..அடியேனும் ஒருவன் ! ..செய்யும் வேலைகளின் போது ...என் படிப்பு சம்பந்தப்பட்ட வேலை யில் ஈடுபடும்
சமயங்களில் மட்டும் கிடைக்கும் திருப்தி இருக்கிறதே ...அட.டட டா ! இருப்பினும் மனசாட்சி கேட்காமல் ... செய்யும் வேலைக்கு ஏற்ப ...சமீபத்தில் MBA வும் படித்து முடித்து கணக்கை நேர் செய்தாயிற்று ! வேலையில் சேர்ந்த பிறகு...அந்த வேலைக்காக படித்து முடிக்கும் 'அட்டு ஊழியங்கள் ' இங்கு தான் நடக்கும் !

சிறு வயதில் 'பயங்கர புத்தக வெறியனாக' இருப்பேன் ... வெறி...என்று ஏன் சொல்கிறேன் என்றால்...காமிக்ஸ்., எழுத்துக் கதை ., எல்லாம் தாண்டி ...பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனை சம்பந்தமான புத்தகங்களை கூட விட்டு வைத்ததில்லை ... என்றால் பார்த்துக் கொள்ளுங்கள...ஏழாம் வகுப்பில் ! எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்...எதுவும் தெரியாமல் இருக்கக் கூடாது ... எண்ணம் எல்லாம் சரி...ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ...பரவலான விஷயத்தை நிறுத்தி ஒரு சில விஷயங்களில் மட்டுமே உழைப்பை குவிக்க வேண்டும் என்ற காலம் தவறிய ஞானம் எனக்கு தாமதமாகத் தான் தெரிந்தது ! எனக்கெல்லாம் சிறு வயதில்.... ஒரு பெரிய நூலகம் அமைத்து ...அதை என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தான் ஆசை ! அப்போதே வீட்டில் பெட்டி பெட்டியாக ...நூற்றுக் கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருப்பேன் ! கல்லூரியிலும் அதே போல் .. படிக்கிறேனோ இல்லையோ அனைத்து பாடப் புத்தகங்களையும் வாங்கி வைத்து விடுவேன் ... Bookomania ! புத்தகங்கள் எனக்கு பழைய திரைப் பட நாயகிகள் மாதிரி ... அதை படித்து 'முடித்ததும் ' ...அவை எனக்கே சொந்தமாகி விட வேண்டும் ....வேறு யாருக்கும் கொடுக்க மாட்டேன் ! இப்படிப்பட்ட நான் ...சம்பந்தமேயில்லாமல்.ஒரு 24x 7 + 365 நாட்களும் வேலை உள்ள தொலை தொடர்ப்பு நிறுவனத்தில் ஊழியம் செய்கிறேன் . எனது ஆறாம் விரலாக செல்பேசி...அது அழைக்கும் போது ...சில வினாடி தாமதமாக ..நான் அதை எடுத்தாலும்...எனது பல வருட நற்பெயர் ...கெட வாய்ப்புண்டு ! தகவல் அலாரம் முதல் நிறுவனத்தின் CEO வரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கக் கூடும் ! எங்கள் வீட்டு கழிவறையில் பிரஷ் வைக்கும் சிறிய ஸ்டாண்ட் ஒன்று தொங்கும்...வருபவர்கள் இங்க எதுக்கு இது என்பார்கள்...பாவம்...அவர்களுக்கு ..என் செல் பேசிக்கான இடம் அது என்று எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை ! இவ்வளவு பெரிய பருப்பு ...சாரி பொறுப்பில் இருக்கிறான் ...சரி..லட்சக்கணக்கில் சம்பளம் என்று நீங்கள் ..நினைத்தால் ..ஏமாந்து போவீர்கள் ... சில ஆயிரங்களுக்கு தான் இந்த அக்கப் போரே ! அதற்க்கு காரணம்...எனது 'பரவலான ' ஆர்வத்தில்... எங்கெங்கோ ஓடி...தாமதமாக புரிந்து...ஒரு விஷயத்தில் குவித்து ...வேலையில் சேர...அதே...அதே... காலம் கடந்த அறிவு ?என்னை சிறந்த நிர்வாகி என்று Appraisal ...பாராட்டு பத்திரங்கள் என்று ஏக மரியாதை...ஆனால் அவை எல்லாம் நான் வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சியுடன் உழைத்ததற்கு கிடைத்தது ...அதைப் பிடித்து செய்தேனா என்றெல்லாம் கேட்க கூடாது....ஆனால் கார்பரேட்டுக்கு பிடித்த மாதிரி செய்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம் !
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே...சன் ..டிவியில் பெரிய அதிசயமாக...பொருத்தமான ஒரு படமாக போட்டிருக்கிறார்கள் !
'மாலை நேர மயக்கம்' - செல்வராகவன் .... படத்தில் , தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கும் புகைப்படகாரரான தனுஷிடம் ...வேற 'பொழப்பை' பார்க்க அறிவுரை சொல்லப்படும் ....அப்ப அவர் சொல்லுவார் " பிச்சைக்காரனாயிருந்தாலும் , பிச்சைக்கார போட்டோகிராபராயிருப்பேன் ! ", என்பார் ! மனதில் ஆழ.... கடப்பாரையால் கிளறியது போல் இருந்தது ! திரைப்படம் தான் என்றாலும் ...சில நல்ல விஷயங்களை நாம் மறுக்கக் கூடாது...மறக்கக் கூடாது ! அந்த படத்திலேயே இன்னொரு காட்சி வரும்...பெரிய புகைப்பட நிபுணராக ஆவதற்கு...வெறியுடன் அலைந்துக் கொண்டிருப்பார் தனுஷ்.......ஒரு உலகபுகழ் நிபுணரிடம் உதவியாளராக சேருவதற்கு...பயங்கர ரிஸ்க் எடுத்து ...Wild Photography க்காக காட்டிற்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். அப்போது ஒரு அழகிய..அபூர்வ...பறவை ஒன்று...மரத்தில் வந்து அமரும் .தனுஷ் அதை படம் எடுக்க விழைகையில் .....அது மிக நிதானமாக தன் இரு இறக்கைகளையும் விரித்து...." இந்தா ...நல்லா எடுத்துக்க " என்று சொல்வது போல் அப்படியே இருந்துக் கொண்டிருக்கும் ! மிக அபூர்வமான நிகழ்வு அது ! சாதாரணமாக எடுக்க இருந்த புகைப்படத்திற்கு இப்படி ஒரு அபூர்வ காட்சி கிடைத்ததை பார்த்து ...தனுஷ் ஸ்தம்பித்து போய் இருப்பார் , அப்போது மரத்திலிருந்து...ஒரு இலை பறந்து வந்து...தனுஷின் தலையில் விழுந்து...முகத்தை வருடியபடி கீழே விழும் ! அது ஒரு உண்மை கலைஞனுக்கு இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் போல் எனக்கு தெரிந்தது...பின் தனுஷ் நிதானமாக அந்தப் பறவையை எடுக்கத் தொடங்குவார் ! பின்னாளில் அந்தப் படங்கள் தான் அவரது திறமையை அவருக்கே புரிய வைக்கும் ! இந்த கவித்துவமான காட்சியை நான் மெய் மறந்து ரசித்து...ஆனால் பிறகு அழுவேன்...ஒவ்வொரு முறையும் ! ஏன் என்று யோசித்தால் ....புரிகிறது.... படம் முடிந்து விட்டது !
-----------------------------------------------------------------------------

இவர்களை போல்.... ஒரு வாழும் கலைஞரையும் தெரியும் ..அவர் 'கள்ளு அண்ணன்' ..ஆம்...கள் இறக்கும் தொழிலாளி ..பல வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்தில் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார் ! உழைப்பு என்றால் அப்படி ஒரு உழைப்பாளி...எப்போது பார்த்தாலும் ...ஏதேனும் வேலை செய்து கொண்டேயிருப்பார்... மரத்தை...மார்ப்பில் அணைத்து ஏறி..ஏறி...மார்ப்பும் ..கைகளும் ...உறுதியாகி ...அவரே ஒரு மரம் போல் தான் இருப்பார் ... அதை எப்படி சொல்ல வேண்டும் என்றால்...வெட்டுவதற்கு முன்பு...அருவாளை கைகளிலும்...மார்ப்பிலும் ..தீட்டிக் கொண்டு Warm up செய்த்துக் கொள்வார் ! அவர் புறங்கைகளும் ...மார்ப்பும்...காப்பு காய்ந்து போய் ...சொர...சொரவென்று... பாறை போல இருக்கும் ! அதில் ரத்தம் ..நரம்பெல்லாம் இருக்கிறதா என்று சந்தேகமாயிருக்கும்! Pure Professionalist ! இவருக்கும் எங்கள் நண்பர்கள் குழாமுக்கும் உள்ள 'கள்ளுத் தொடர்ப்பை ' பிறிதொரு சமயம் தனி பதிவாக சொல்கிறேன் ! இப்போது கள் தடை செய்யப்பட்டதால் அவர் திருநெல்வேலி அருகே உள்ள சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார்...'வாழ்வாகாரம்' !
இவ்வளவு சூழ்நிலையிலும் நம் நாட்டில் இலக்கிய ஆர்வமும் இருந்து கொண்டிருப்பது ஒரு எட்டா.. ம் அதிசயம் ! ஆனால் இங்கே இலக்கியம் படைக்கக் கூட...நாம் வேறு ஏதேனும் ஒரு வாழ்வாதார பாதுகாப்பு கூடாரத்தில் இருந்துக் கொண்டு தான் படைக்க முடியும் ! பாரதி முதல் சமீபத்திய கோபிகிருஷ்ணன் வரை...பல Catalystகள் இதை நமக்கு புரிய வைத்துள்ளனர் ! வழக்கம் போல் முடிக்காமல் ...பாதியிலேயே Draft ல் ...இதுவும் தங்கி விடும் என்று நினைத்தேன்...நல்ல வேளை ...இன்று ஆயுத பூஜை என்பதால்..வந்த செல் அழைப்புகள் எல்லாம்...வாழ்த்துகளுக்கும்...பூஜை அழைப்புகளுக்கும் மட்டுமே இருந்ததால் ... முடிந்தது...ஆயுத பூஜைக்கு ஆயத்தமாகிறேன் !

No comments:

Post a Comment